உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எதுலயாவது இழுத்து விட்றாதீங்கடா...: டென்ஷனான திமுக மாஜி மூர்த்தி

எதுலயாவது இழுத்து விட்றாதீங்கடா...: டென்ஷனான திமுக மாஜி மூர்த்தி

மதுரை: மதுரையில், கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண், கற்கள் எடுத்து, அரசுக்கு, 5.39 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான வீடுகள், அவரது மைத்துனர், குத்தகைதாரர்கள் வீடுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று 4 மணி நேரம் சோதனை நடத்தினர். கடந்த தி.மு.க., ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் மூர்த்தி. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, சத்திரவெள்ளாளப்பட்டியில், அவரது இடங்களில் உள்ள கல்குவாரியில், அரசு அனுமதித்த அளவை விட அதிகளவில் சரளைக் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஒரு இடத்தில் அரசுக்கு 2.32 கோடி ரூபாயும், மற்றொரு இடத்தில், 3.07 கோடி ரூபாயும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை ஆர்.டி.ஓ., செல்வன் புகார் அளித்தார்.

ஆவணம் பறிமுதல்

இதன் அடிப்படையில், மூர்த்தி, அவரது இடத்தை கல்குவாரி குத்தகைக்கு எடுத்த அவரது மைத்துனர் ராஜாமணி மற்றும் அனந்தகுமார், செந்தில்குமார் ஆகியோர் மீது மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். தொடர்ந்து, நேற்று காலை, 6:30 மணி முதல், மதுரை அய்யர் பங்களா எழில் நகரில் உள்ள மூர்த்தியின் வீடுகளில் டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையிலான போலீசார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். தகவலறிந்து தி.மு.க., - எம்.எல்.ஏ., மணிமாறன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் கூடினர். அதே நேரம், குத்தகைதாரர்களான மதுரை, மேட்டுப்பட்டியில் உள்ள அனந்தகுமார், பாலமேட்டில் உள்ள செந்தில்குமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. மூர்த்தி வீட்டில் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டன. மற்ற இடங்களில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுபோல, சிவகங்கை மாவட்டம், பூவந்தியில், அமைச்சர் மூர்த்தியின் மனைவி செல்லம்மாளின் சகோதரர்கள் விஜயகிருஷ்ணன், ராஜாமணி ஆகியோர் வீடுகளிலும், மதுரை குற்றப்பிரிவு போலீசார், நேற்று 6 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை குறித்து மூர்த்தி கூறியதாவது: கடந்த, 2019ல் சத்திரவெள்ளாளபட்டியில் உள்ள என் இடத்தில் குவாரி நடத்த, ஐந்து ஆண்டு குத்தகைக்கு ராஜாமணி, அனந்தகுமாருக்கு கொடுக்கப்பட்டது. குவாரிக்கு உகந்த கல் கிடைக்கவில்லை என, 2021ல் அதனை அனந்த குமார் கைவிட்டார். ராஜாமணி, கற்களை எடுத்தபோது, அருகில் உள்ள என் இடத்தில் மண் எடுத்ததாக, உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். 'நான் கலெக்டரின் அனுமதி பெற்று 'லீசு'க்கு கொடுத்திருக்கிறேன். மண் எடுத்தது எனக்கு தெரியாது' என, ஏற்கனவே ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்துள்ளேன். இது தொடர்பான வழக்கில், இடத்தை அளந்து முறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகாரிகள் அதை கடைப்பிடிக்காமல் தன்னிச்சையாக, 'ட்ரோன்' சர்வே செய்து, என் இடத்தில் மண் எடுத்திருப்பதாக, வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் எந்த மண்ணையும், ஜல்லியையும் எடுக்கவில்லை.

ஸ்டாலின் விசாரிப்பு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என்னிடம் போனில் பேசி, 'என்ன நடக்கிறது' என, கேட்டார். 'எதுவும் உண்மை இல்லை. ஒன்றும் பிரச்னை இல்லை' என, அவரிடம் தெரிவித்தேன். நாங்கள், ஏற்கனவே நீதிமன்றத்திற்கு போய் தான், நீதி பெற்றிருக்கிறோம். இதற்கும் நீதிமன்றம் சென்று சட்டரீதியாக அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

'எதுலயாவது இழுத்து விட்றாதீங்கடா...'

சோதனை நடந்த போது, வீட்டில் இருந்து வெளியில் வந்து, வழக்கறிஞரை மூர்த்தி சந்தித்து, 'எனக்கு குவாரியே இல்லையே,' என கூறினார். மூர்த்தியின் வீட்டின் முன் தி.மு.க., தொண்டர்கள் கூடி இருந்தனர்.அப்போது, அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு போலீசாரை, மூர்த்தி அழைத்து சென்றபோது, தொண்டர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு, 'போலீஸ் அராஜகம் ஒழிக' என, கோஷமிட்டார்.இதனால், கோபமடைந்த மூர்த்தி, 'யாருடா அது... சும்மா இருங்கடா... எதுலயாவது இழுத்து விட்றாதீங்கடா...' என கூறி, 'டென்ஷன்' ஆனார்.

திசை திருப்பவே சோதனை

நாட்டிலேயே மிகப் பெரியஅளவில், தமிழகத்தில் போதைப்பொருள் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, மக்களை திசை திருப்பவே, முன்னாள் அமைச்சர் மூர்த்தியை குறி வைத்து சோதனை நடத்தப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.,வினரின் குற்றச் செயல்களும், எம்.எல்.ஏ.,க்களின் ஒழுங்கீனமும், சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டது. த.வெ.க., அரசு போடும் பொய் வழக்குகளை, சட்டப்படி எதிர்கொண்டு தி.மு.க., வெல்லும். கடந்த ஆறு மாத ஆட்சியில், மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே, முதல்வர் விஜய் சம்பாதித்துள்ளார்.- ஸ்டாலின், தி.மு.க., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !