உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தென்மண்டல தி.மு.க.,வில் அதிரடி மாற்றம்; மா.செ., நியமனத்தில் அனைத்து ஜாதிக்கும் வாய்ப்பு

தென்மண்டல தி.மு.க.,வில் அதிரடி மாற்றம்; மா.செ., நியமனத்தில் அனைத்து ஜாதிக்கும் வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபை தேர்தலில், தென்மண்டலத்தில், தி.மு.க., வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்ய, கட்சி மாவட்டங்களை பிரித்து, அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், புதிய மாவட்ட செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், ஆளும் தரப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒங்கிணைப்பு

இதற்கு, மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய செயலர்களின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என, கட்சி மேலிடம் கருதுகிறது. குறிப்பாக, தென்மண்டலத்தில் உள்ள, சில மாவட்டங்களில் நிலவும் கோஷ்டிப்பூசலை சரிக்கட்ட, மாவட்ட அமைப்புகளை பிரித்து, அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில், புதிய மாவட்ட செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க.,வில் நிர்வாக வசதிக்காகவும், சட்டசபை தேர்தல் பணிக்காகவும், சில மாற்றங்களை தலைமை செய்து வருகிறது. கோஷ்டிப்பூசல் நிலவும் மாவட்டங்கள், ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களை கணக்கெடுத்து, அந்த மாவட்டங்களில், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் நியமிக்கப்பட உள்ளனர்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கட்டுப்பாட்டில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் என, மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

பல்வேறு பிரச்னை

தென்காசி தெற்கு மாவட்டத்தில், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லுார் ஆகிய, மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லுார் என, இரண்டு தொகுதிகள் உள்ளன. தெற்கு மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் தொகுதியில் அடங்கிய பாப்பாக்குடி ஒன்றியத்தில் உள்ள, 14 ஊராட்சிகள், திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ளன.எனவே, ஆலங்குளம் தொகுதியில், அரசு நிர்வாக ரீதியாகவும், கட்சி அமைப்பு ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. இப்பிரச்னையை தீர்க்க, தென்காசி தெற்கு மாவட்டத்தின் ஆலங்குளம் தொகுதியும், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் அடங்கிய அம்பாசமுத்திரம் தொகுதியும் சேர்த்து, புதிதாக திருநெல்வேலி மேற்கு மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

சம முக்கியத்துவம்

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள நாடார், முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், முஸ்லிம் ஆகிய நான்கு சமுதாயங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், புதிய மாவட்டச் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோஷ்டிப்பூசல் காணப்படுகின்றது. இதே அடிப்படையில், அந்த மாவட்டங்களிலும் தலா 2 சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டச் செயலரை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதோடு, அந்த பகுதியில் பிரதானமாக இருக்கும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தோரை மா.செ.,க்களாக நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதேபோல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகத்தை சீராக நடத்துவதற்கு ஏற்ப பிரிப்பு நடவடிக்கையும், மா.செ.,க்கள் நியமனமும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும். சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும், மாவட்ட பிரிப்பும், புதிய மாவட்டச் செயலர் நியமனமும் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஏப் 10, 2025 18:42

இது தான் நீங்கள் ஜாதிகளை ஒழி(த்த)க்கிற லட்சணமா ???


ஆரூர் ரங்
ஏப் 10, 2025 10:22

ஈவேரா என்றோ சாதிகளை ஒழித்துவிட்டார். ஆரிய சக்திகளின் பரப்புரையை நம்பாதீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை