சட்டசபை தேர்தலுக்காக, தமிழக மக்களை சலுகை மழையில் குளிர்விக்க, தி.மு.க., அரசு முடிவு செய்து, அதற்கான தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஹார் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி வெற்றிபெற்றால், தமிழக சட்டசபைத் தேர்தலிலும், 'இண்டி' கூட்டணியே வெற்றி பெறும் என்ற அசாத்திய நம்பிக்கையில், முதல்வரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் இருந்தார். அவரது நம்பிக்கையை குலைக்கும் வகையில், பீஹாரில் இண்டி கூட்டணி படுதோல்வி அடைந்தது; வெறும் 6 இடங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசி வருகிறார். அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் செய்ய வேண்டிய இரு முக்கிய விஷயங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: பீஹார் தேர்தலுக்கு முன், அங்கு தேர்தல் களத்தை, பா.ஜ., கூட்டணி எப்படி எதிர் கொண்டது என்பதை ஆழமாக பார்க்க வேண்டும். மக்கள் நல திட்டங்களை வாரி வழங்கியதன் வாயிலாகத்தான், அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ., கூட்டணியே மீண்டும் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. குறிப்பாக, 'முதல்வரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம்' என்ற பெயரில் பெண்கள் சுய தொழில் தொடங்கும் வகையில், 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதுபோல, மகளிருக்கான கடன் வழங்கும் திட்டத்தின் தொகை அளவும் இரண்டு லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, தேர்தலுக்கு முன் 10 ஆயிரம் ரூபாய் கடன் தொகை வழங்கியதோடு, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அது தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இவை தான், பீஹார் மகளிரை, பா.ஜ., கூட்டணி நோக்கி சுண்டி இழுத்தது. அதே மாதிரியான அறிவிப்புகளை, தமிழகத்திலும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., வெளியிட வேண்டும். கஜானாவில் நிதி இல்லை என அதிகாரிகள் சொன்னாலும், நிதியை ஏற்பாடு செய்து, அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டுமே, மகளிர் ஓட்டுகளை அள்ள முடியும். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, பொங்கலையொட்டி, ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களுக்கும், இலவசப் பொருட்களோடு தலா ரூ.2,000 வழங்கினார். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இலவச பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதுவும் தரமில்லாதவை என குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, வரும் பொங்கலுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் அளித்த அதே பரிசுத் தொகையை ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரருக்கும் வழங்க வேண்டும். இதுபோல, மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகவும் அறிவிக்க வேண்டும். ஏனெனில், தமிழகத்துக்கு பிறகு, இந்த திட்டத்தை துவக்கிய மஹாராஷ்டிராவில், மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாகி விட்டது. இதுபோன்ற சலுகை அறிவிப்புகளை வெளியிட்டால், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் ஆலோசனைகளை புறம் தள்ளாத முதல்வர் ஸ்டாலின், அவற்றை குறித்து வைத்துக் கொண்டார். பின், அதிகாரிகள் சிலரை அழைத்து, இது தொடர்பாக பேசி உள்ளார். மேலும், இது தொடர்பான அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும்; அதற்கான முன்னேற்பாடுகளை செய்யுங்கள் எனவும் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, தேர்தலுக்கு முன் தமிழக அரசு தரப்பில் வெளியிட வேண்டிய அறிவிப்புகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், அதிகாரிகள் மட்டத்தில், தொடர் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவ் வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-