நிறைவுச் சான்று பெறுவதிலிருந்து, எட்டு வீடுகள் வரையிலான ஒரே கட்டடம் மற்றும் 300 சதுர மீட்டர் பரப்பிலான வணிகக் கட்டடங்களுக்கு விலக்கு அளித்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துமாறு, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில், 2019ல் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் வெளியிடப்பட்டன.அதன்படி, 12 மீட்டருக்கு மேலான உயரம், 8072 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்பு, மூன்றுக்கும் அதிகமான வீடுகள் கொண்ட ஒரே கட்டடத்துக்கு கட்டட நிறைவுச் சான்று அவசியம். இந்த விதிகளின்படி, உரிய அதிகார அமைப்பிடம் கட்டட அனுமதி பெற்று, அதன்படி கட்டியிருப்பதாகக் நிறைவுச் சான்று பெற்றால் மட்டுமே, மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும். வணிகக் கட்டடங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதற்கும் இந்த சான்று பெறாவிடில் எந்த இணைப்புமே பெற முடியாது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த விதிகளைப் பற்றி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், ஏராளமான மக்கள், இந்த விதிகளுக்கு முரணாக, நான்கு வீடுகள் மற்றும் சிறிய கடைகளைக் கட்டி விட்டு, மின் இணைப்புப் பெற முடியாமல் தவிக்கின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த விதிகள் மாற்றப்படும் என்று, சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி தரப்பட்டது. வெளியான அரசாணைகள்
கடந்த மார்ச் 11 ல், இரு அரசாணைகள் (எண்: 69 மற்றும் 70) வெளியிடப்பட்டன. ஓர் அரசாணையில், அதிகபட்ச உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்த்தியும், முன்புறம், பின்புறம் உள்ளிட்ட பக்கத் திறவிடங்களில் மாற்றம் செய்தும் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்டது. அதேபோல, 750 சதுர மீட்டர் (8072 சதுர அடி) பரப்பளவுக்கு உட்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் என்பது 8 வீடுகள் வரையுள்ள ஒரே கட்டடம் வரை கட்டட நிறைவுச் சான்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.ஆனால் அதில் வணிகக் கட்டடங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரண்டு அரசாணைகளிலும் பெரும் குழப்பங்கள் இருப்பதால், உரிய திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று, பல தரப்பிலும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனை ஏற்று, கடந்த 28ம் தேதியன்று, விதிகளில் திருத்தம் செய்து, புதிய அரசாணை (எண்:123) வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, 14 மீட்டர் உயரத்துக்கு மிகாத 750 சதுர மீட்டர் (8073 சதுரஅடி) பரப்பளவுள்ள 8 வீடுகள் கொண்ட ஒரே குடியிருப்புக் கட்டடம், இதே உயரத்துக்கு உட்பட்ட 300 சதுர மீட்டர் (3229 சதுர அடி) பரப்பளவுள்ள வணிகக்கட்டடங்களுக்கு கட்டட நிறைவுச் சான்று அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை, கட்டுமானத் துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்பும் உண்டு
அதே நேரத்தில், அனுமதியற்ற கட்டடங்களுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகள், இந்த அரசாணைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. எட்டு வீடுகள் கொண்ட ஒரே கட்டடம் என்பது, வணிக ரீதியாகக் கட்டப்படும் சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பாகிவிடும் என்பதால், அதற்கு விலக்கு அளிப்பது, விதிமீறல் கட்டடங்கள் அதிகரிக்க வழிவகுக்குமென்று அச்சம் தெரிவித்துள்ளன.ஆயிரம் சதுர அடி பரப்பிலான சிறிய வணிகக் கட்டடங்களுக்கு இந்த சான்றிலிருந்து விலக்கு அளித்தால் போதுமென்று, பல அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில், 3229 சதுர அடி பரப்பிலான வணிகக் கட்டடங்களுக்கு விலக்கு அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, 30 கடைகள் கொண்ட ஒரு சிறிய வணிக வளாகத்தையும், அனுமதியின்றி, விதிமீறல் கட்டவும் துாண்டுகோலாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதனால் இந்த அரசாணையை எதிர்த்து, மீண்டும் கோர்ட் செல்லவும் அமைப்புகள் தயாராகி வருகின்றன.- நமது சிறப்பு நிருபர்-