உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேளச்சேரிக்கு விடிவு! 10 ஏக்கரில் அமைகிறது குளம், நீர்வழிப்பாதை; வெள்ள பாதிப்பை தடுக்க மாநகராட்சி அதிரடி

வேளச்சேரிக்கு விடிவு! 10 ஏக்கரில் அமைகிறது குளம், நீர்வழிப்பாதை; வெள்ள பாதிப்பை தடுக்க மாநகராட்சி அதிரடி

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 10 ஏக்கர் ரயில்வே நிலத்தில் குளம், பூங்கா, நீர்வழிப்பாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், வெள்ள பாதிப்புக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக பகுதிவாசிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.வேளச்சேரி - பெருங்குடி இடையேயான, 2.5 கி.மீ., துாரம், 80 அடி அகல ரயில்வே சாலையை ஒட்டி, 150 அடி அகல, சிக்ஸ் கல்வெட்டு என்ற நீர்வழிப்பாதை உள்ளது. வேளச்சேரி, தரமணி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழைநீர், இந்த நீர்வழிப்பாதை வழியாக சதுப்பு நிலத்தை அடையும்.ரயில்வே சாலையின் வடக்கு பகுதியில், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட, 316, 317, 656, 658 உள்ளிட்ட சர்வே எண்களில், பட்டா மற்றும் அரசு இடங்கள் உள்ளன. அரசு இடங்கள், ரயில்வேக்கு ஒதுக்கியதுடன், மீதமுள்ள பகுதிகள் நீர்வழிப்பாதையாக உள்ளது. நீர்வழி பாதையில் உள்ள இடத்தில், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி இருந்தது.

மோசடி அம்பலம்

இதனால், நீர்வழி பாதையில் மழைநீர் செல்வது தடைபட்டது. வேளச்சேரி வெள்ள பாதிப்புக்கு, இந்த ஆக்கிரமிப்புகள் ஒரு காரணமாக இருந்தன. இது குறித்து, 2018ல், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தி அடிப்படையில், உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழிப்பாதையை பாதுகாக்க வேண்டும் என, அரசுக்கு உத்தரவிடும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, ஆக்கிரமிப்பு இடங்கள் அளவீடு செய்யப்பட்டன. இதில், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை தாலுகாவில் உள்ள பட்டா இடத்தின் சர்வே எண்களை மோசடியாக பயன்படுத்தி, அரசு இடத்தை ஆக்கிரமித்தது தெரிந்தது.மேலும், சோழிங்கநல்லுார் தாலுகா இடத்திற்கு, வேளச்சேரி தாலுகா அலுவலகம் பட்டா வழங்கியது வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, 2018 செப்டம்பரில் சில ஆக்கிரமிரப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கி, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, 1.50 ஏக்கர் இடத்தை மீட்டது. அதில் இருந்த, 24 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

மீண்டும் ஆக்கிரமிப்பு

மீதமுள்ள, சில ஆக்கிரமிப்புக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகள், ஓரிரு நாளில் மீட்கப்படும் என, அப்போது வருவாய்த்துறை கூறியது. ஆனால், மீட்கப்பட்ட இடத்தை அறிக்கையாக அளித்து, மொத்த ஆக்கிரமிப்பையும் எடுத்ததாக, நீதிமன்றத்தில் வருவாய்த்துறை கூறியுள்ளது.ஆனால், மீதமுள்ள இடத்தை மீட்க, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மீட்கப்பட்ட இடங்களை மீண்டும் ஆக்கிரமித்து, வருவாய்த்துறை வைத்த 'சீல்' உடைக்கப்பட்டது. மாநகராட்சி வழங்கிய நோட்டீசை கிழித்து எறிந்துவிட்டு, மீண்டும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்காததால், நீர்வழிப் பாதையில் நீரோட்டம் இல்லாமல், ஒவ்வொரு மழைக்கும் வேளச்சேரி வெள்ளக்காடாக மாறியது.

அபராதம்

இது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது. சீல் உடைத்து, நோட்டீஸ் கிழித்தவர்கள் மீது, வருவாய்த்துறை போலீசில் புகார் அளித்தது. இந்நிலையில், வருவாய்த்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.இந்நிலையில், 2018ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு, 2022 ஜன., 27ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மார்ச் 31ம் தேதி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், 'நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும்படி, தலைமை செயலர் சுற்றறிக்கை வழங்கியும், அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. நீதிமன்ற உத்தரவை, 10 நாட்களுக்குள் அமல்படுத்தவில்லை என்றால், தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டிவரும்; சம்பந்தப்பட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அவர்கள் சம்பளம் பெறவும் அனுமதிக்க மாட்டோம்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இதையடுத்து, ஆக., 2022ல், அப்போதைய சென்னை கலெக்டர் அமிர்தஜோதி, வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலையின், வடக்கு பகுதி ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தார்.

ஒப்படைப்பு

பின், சர்வே எண் அடிப்படையில் அளவீடு செய்யப்பட்டன. ஆனால், ஆக்கிரமிப்பு மீட்கப்படவில்லை. இந்த இடத்தில், ரயில்வே துறைக்கு எவ்வளவு வழங்கப்பட்டது; அதன் எல்லை எது போன்ற விபரங்களும் தெரியாததே இதற்கு காரணம்.இந்நிலையில், இம்மாதம் துவக்கத்தில், ரயில்வே வசம் இருந்த, ரயில்வே சாலை மற்றும் அதை ஒட்டி உள்ள இடங்களை பராமரிப்புக்காக, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிக்ஸ் கல்வெட்டை சீரமைத்து, நீரோட்ட வேகம் அதிகரிக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி மழையில், பல தெருக்களில் வெள்ளம் வடிய இது ஒரு காரணமாக அமைந்தது. தொடர்ந்து, கடந்த 15ம் தேதி துணை முதல்வர் உதயநிதி, 16ம் தேதி முதல்வர் ஸ்டாலின், சிக்ஸ் கல்வெட்டு பகுதியை பார்வையிட்டனர். பின், உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர். இதையடுத்து, ரயில்வே சாலையின் வடக்கு திசையில் உள்ள, 10 ஏக்கர் இடத்தில் குளம் மற்றும் அடர்வனம் அமைக்க, முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்யவோ, ஆய்வு செய்யவோ அதிகாரிகள் சென்றால், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தோர் நேரடியாகவும், ஆட்களை அனுப்பியும் இடையூறு ஏற்படுத்தி வந்தனர். துறை ரீதியாக அணுகியும், நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டனர். துணை முதல்வர், முதல்வர் வந்து சென்ற பின், தினமும் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிகாரிகள் உள்ளனர். தற்போது, எந்த கட்சியினரின் இடையூறும் இன்றி, அதிகாரிகள் சுதந்திரமாக பணி செய்கின்றனர்.நான்கு நாட்களாக, ஐந்து 'பொக்லைன்' உள்ளிட்ட வாகனங்களால் குளம் தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, ஆறு ஆண்டுகளாக சிக்கியிருந்த ஆக்கிரமிப்பிற்கு விடிவு காலம் பிறந்துள்ளதாகவும், வெள்ள பாதிப்பிற்கு தீர்வு கிடைக்குமெனவும், பகுதிவாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிக்க முடியாது

ரயில்வே சாலை, அதன் அருகில் உள்ள இடத்தை பாதுகாப்பது, நீர்வழிப்பாதை அமைப்பதில், துறை ரீதியாக நிர்வாக சிக்கல் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், இந்த பகுதியை ரயில்வே நிர்வாகம், மாநகராட்சி வசம் ஒப்படைத்தது. இதனால், அந்த இடம் முழுதையும் பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். குளம், பூங்கா, நீர்வழிப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம். குப்பை கொட்டுவதை தடுக்க, எட்டு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கிறோம். இனிமேல் ஆக்கிரமிக்க முடியாது. குளம் அமைப்பதால், வேளச்சேரி, தரமணியின் ஒரு பகுதி பாதுகாக்கப்படும்.- மாநகராட்சி அதிகாரிகள்

'தினமலர்' நாளிதழுக்கு நன்றி

ஆக்கிரமிப்புகள் முளைக்கும் போதெல்லாம், 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதனால், நிரந்தர ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன. இதற்காக, நலச்சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். எல்லை நிர்ணயம் செய்து வேலி அமைக்காததால், புதிதாக ஆக்கிரமிப்புகள் உருவாகின. முதல் முறையாக, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சிக்ஸ் கல்வெட்டு பகுதியை பார்வையிட்டனர். இதனால், இந்த பகுதிக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குளம் வெட்டி, நீர்வழிப்பாதை அமைப்பதால், மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்க வாய்ப்பில்லை என நம்புகிறோம்.- நலச்சங்க நிர்வாகிகள், வேளச்சேரி.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி