உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெள்ள அபாய எச்சரிக்கை! பிரதான ஆறு, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை! பிரதான ஆறு, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவற்றுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நேற்று முன்தினம் காலை முதல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், இம்மாவட்ட ஏரிகளுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் சென்னையில் 28ல் 14; செங்கல்பட்டில் 564ல் 347; காஞ்சிபுரத்தில் 381ல் 71; திருவள்ளூரின் 578 ஏரிகளில் 221 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

உபரிநீர் வெளியேற்றம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கும், பல சிறிய ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக, சோழவரம் ஏரிக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. எனவே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தாமரைப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு நீர் திருப்பும் பணிகளை நீர்வளத்துறை துவங்கியுள்ளது. இதனால், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால், அதில் இருந்து ஆரணியாற்றில் வினாடிக்கு, 5,600 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், திருவள்ளூர்மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, அதில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.ஆரணியாற்றின் கரைப்பகுதிகளில் வசிக்கும் ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிபூண்டி வட்டங்களில் உள்ள 32 கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒதப்பை, ஆட்ரம்பாக்கம், நெய்வேலி, எறையூர், பீமந்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், இடையன்சாவடி, மணலி, மணலிபுதுநகர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.மூவரசம்பட்டு ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீர், கீழ்க்கட்டளை கே.ஜி.கே., நகர், அன்பு நகர், காந்தி நகர் பகுதிகளில், தெருக்களில் 2 அடி உயரத்திற்கு தேங்கியது. இதனால், அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாமல், வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலும் விரைவில் உபரிநீர் வெளியேற்றுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. ஆறுகள், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

போக்குவரத்து பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால், மழைநீர் வடிகால்கள் வழியாக பிரதான நீர்வழித்தடங்களுக்கு வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, பரங்கிமலை - பூந்தமல்லி சாலை, அம்பத்துார் - செங்குன்றம் சாலை, ஆவடி நெடுஞ்சாலை உட்பட பல சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.சென்னையில் பிரதான சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை மோட்டார் பொருத்திய டிராக்டர் மற்றும் ராட்சத மோட்டார் வாயிலாக வெளியேற்றும் பணி மாநகராட்சி வாயிலாக நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 210 இடங்களில் நீர் தேக்கம்

சென்னை மாநகராட்சி எல்லை பகுதிகளில், நேற்று காலை முதல் மாலை வரை, சராசரியாக 4.5 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நெற்குன்றம் பகுதியில் 8.1 செ.மீ., மழையும், குறைந்தபட்மாக ஆர்.ஏ.புரத்தில் 0.1 செ.மீ., அளவில் மழையும் பெய்தது. இந்த மழையால், சென்னையில் உள்ள பிரதான சாலைகள் முதல் உட்புற சாலைகள் வரை மழைநீர் தேங்கியது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, சென்னை பல் மருத்துவமனை கட்டடங்களில் மழைநீர் புகுந்தது.அதன்படி, 210 இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டாலும், மற்ற இடங்களில் நீர் தேக்கம் உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் பிரதான சாலைகளில் வெள்ள நீர் அகற்றப்பட்டாலும், உட்புற சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆறு மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக அகற்றினர். பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்றாலும், மீனம்பாக்கம் அருகில் உள்ள பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் தில்லைகங்காநகர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தில்லைகங்காநகர் சுரங்கப்பாதையில் சிக்கிய ஜீப் வாகனத்தை பெரும் முயற்சிக்கு பின், வெளியேற்றினர். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் உடனடியாக நீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல் அடைப்பு ஏற்பட்டு வடிகால், நீர்நிலைகளிலும் கழிவுகள் அகற்றப்பட்டு, தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கையும் மாநகராட்சி எடுத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை