சென்னை அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கோட்டூர்புரத்தைசேர்ந்த ஞானசேகரன், 37, மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், ஞானசேகரன் ஏற்கனவே ஒரு கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஞானசேகரன், சென்னையின் சைதாப்பேட்டை பகுதி தி.மு.க.,வில் வட்ட அளவிலான பொறுப்பில் இருந்த போதும், ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் அல்ல என ஆளும்கட்சித் தரப்பில், அமைச்சர்கள் வரை மாறி மாறி அறிக்கை விட்டுக் கொண்டிருக்க, ஞானசேகரன், தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை எதிர்கட்சியினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=957hdsjn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஞானசேகரன் ஏற்கனவே ஒரு கடத்தல் வழக்கில் குடும்பத்தினருடன் சிக்கிய விவகாரம் வெளி வந்து, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து, இந்த வழக்கை நுணுக்கமாக கண்காணிக்கும் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:ஞானசேகரன் பழைய குற்றவாளி இல்லை என, எடுத்த எடுப்பிலேயே போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதும், அவனது பின்புலம் குறித்து விசாரித்தோம். அப்போதுதான் அவன், 2018ல் ஒரு கடத்தல் வழக்கில் ஈடுபட்டு குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது.புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் முத்துக்குமரன், 55. அவரும் அவருடைய நண்பர் பாலச்சந்திரனும் சேர்ந்து மதுராந்தகம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வந்தனர். அவர், தொழில் நிமித்தமாக அடிக்கடி வங்கிக்குச் சென்று வருவார். அந்த சமயத்தில், மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்த ஞானசேகரன், தன்னுடைய நண்பர்கள் சுரேஷ் மற்றும் முரளி ஆகிய இருவருடன் சேர்ந்து, முத்துக்குமரனை கடத்தி, பணம் பறிக்க திட்டம் போட்டனர். ஞானசேகரன், இதை தன்னுடைய இரு மனைவிகளான சரண்யா, விக்டோரியா ஆகியோரிடமும், தாய் கங்கா தேவியிடமும் சொல்ல, அவர்களும் கடத்தல் திட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இதற்காக, முத்துக்குமரனின் டைல்ஸ் கடை பக்கம் சென்று, பலமுறை நோட்டமிட்டுள்ளனர். பின், ஜூலை 30, 2018ல் கடத்தல் திட்டத்தை அரங்கேற்றம் செய்துள்ளனர். தன்னுடைய நண்பர்கள் இருவருடன் காரில் சென்று காத்திருந்தனர். இரவு 9:30 மணி அளவில் பிள்ளையார் குப்பம் நோக்கி காரில் சென்ற முத்துக்குமரனை, பாக்கம் பகுதியில் மடக்கிய ஞானசேகரன் கும்பல், கத்தி மற்றும் துப்பாக்கி முனையில், முத்துக்குமரனை கடத்தி உள்ளனர். முத்துக்குமரன் செல்போனப் பறித்து அதை, 'ஸ்விட்ச் ஆப்' செய்துள்ளனர். பின், அவரை பல இடங்களுக்கும் கொண்டு சென்று மிரட்டி அடித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவருடைய வீட்டுக்கு போன் செய்து, 15 லட்ச ரூபாய் கொடுத்தால், முத்துக்குமரனை விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். பதறிய குடும்பத்தினர், அவருடைய தொழில் பார்ட்னரும் நண்பருமான பாலச்சந்தருக்கு, இந்தத் தகவலை தெரிவித்தனர். உடனே, முத்துக்குமரன் கடத்தப்பட்ட விபரத்தை புகாராக எழுதி மதுராந்தகம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ளார் பாலச்சந்தர். இதையடுத்து, முத்துக்குமரனை காப்பாற்றுவதோடு, கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக, அப்போதைய காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் அடிமானி, எட்டு தனிப்படைகளை அமைத்தார். பாலச்சந்தரை, கடத்தல் கும்பலுடன் பேச வைத்து, அவர்கள் சொன்ன இடத்துக்கு 10 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல திட்டம் போட்டுக் கொடுத்தனர். ஆனால், தாங்கள் குறிப்பிட்டபடி, அந்த இடத்துக்கு ஞானசேகரன் கும்பல் வரவில்லை. இதற்கிடையில், வந்தவாசி அருகில் முத்துக்குமரன், உணர்வற்ற நிலையில் கிடக்கும் தகவல் போலீசுக்குக் கிடைத்தது. உடனே, அங்கு சென்று முத்துக்குமரனை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, அவரை காப்பாற்றினர். பின், தப்பியோடிய கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, மதுராந்தகம் பகுதியில் சாலை சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான காரில் சிலர் பயணிப்பதை அறிந்த, மதுராந்தகம் போலீசார் காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், கார் வேகமாக செல்லவே, ஐந்து கி.மீ., தூரத்துக்கு போலீஸ் விரட்டிப்பிடித்தது. காரில், ஞானசேகரன், அவருடைய நண்பர்கள் சுரேஷ் மற்றும் முரளி என மூவரும் இருந்தனர். காரில் இருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், ஞானசேகரன் தன்னுடைய நண்பர்கள், மனைவிகள் சரண்யா, விக்டோரியா மற்றும் தாய் கங்கா தேவி ஆகியோருடன் சேர்ந்து, முத்துக்குமரனை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டு, பல நாட்கள் காத்திருந்து திட்டத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. இந்த வழக்கில், ஞானசேகரன், குடும்பத்தினருடன் மொத்தம் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின், ஞானசேகரன் ஜாமினில் வெளி வந்துள்ளார். அதன்பின்பே அவர், அரசியல்வாதிகளுடனான நட்பை, வேகமாக வளர்த்துக் கொண்டுள்ளார். போலீஸ் அதிகாரிகள் தொடர்பும் கிடைத்துள்ளது. இதை வைத்து, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆட்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஞானசேகரன் மீதான மற்ற வழக்குகள் குறித்து தகவல் சேகரிக்கப்படுகிறது. ஞானசேகரன் பின்புலம் இப்படியிருக்கும்போதே, அவரை காப்பாற்றும்விதமாக அரசு தரப்பில், சப்பை கட்டு கட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -