ஊட்டி : நீலகிரி போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணியர், வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தடுக்க, கோடை சீசனில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.நீலகிரிக்கு வரும் பல இளைய சுற்றுலா பயணியர், சுற்றுலா மையங்கள் தவிர்த்து, வனப்பகுதிகள்; தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று, 'சாகச' சுற்றுலாவில் ஈடுபடுவதை, சமீபத்தில் வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களை வனப்பகுதிக்குள் அழைத்து செல்ல, உள்ளூரிலும் சிலர் உள்ளனர். அதிகரித்த 'மஞ்சும்மல் பாய்ஸ்'தாக்கம்
இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த, 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம், கேரளாவை விட, தமிழகத்தில் அதிக வசூலை குவித்துள்ளது. அந்த சினிமாவின் தாக்கம் பல இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது . சுற்றுலா சென்றால் இது போன்ற அத்துமீறும் சாகச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம், இளையோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நீலமழையில் அரங்கேறிய மரணம்
உதாரணமாக, கடந்த, 15ம் தேதி , திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன பொறியாளர் பிரவீன்குமார், 26, மற்றும் தர்மபுரி, சேலம், மதுரை, பெங்களூரு, நீலகிரி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த நண்பர்கள், 10 பேர், நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை அருகே, வனத்துறையால் தடை செய்யப்பட்ட செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்றனர்.அபாயகரமான விஷப்பூச்சிகள் அதிகம் உள்ள மலையின் அடர்ந்தபகுதியில், குளவி கூடு கலைந்ததால், பிரவீன்குமார் உட்பட 3 பேர் ஓட்டம் பிடித்தனர். தர்ஷத், 28, குமார், 29, ஆகியோர் காயத்துடன் தப்பினர். பிரவீன்குமாரை மட்டும் காணவில்லை.மறு நாள் போலீசார், வனத்துறையினர் தீயணைப்பு துறையினர், 300 அடி பள்ளத்தில் முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் பிரவீன் குமாரின் உடலை மீட்டு, உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். ஓய்வில்லா உலகில் வேலை நிமிர்த்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இளையோருக்கு சுற்றுலா பயணம் என்பது ஒரு வரபிரசாதம். அந்த பயணத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சாகசம் நிச்சயம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு எல்லை உண்டு.அந்த எல்லை தாண்டும் போதுதான், வாழ்வின் மிகழ்ச்சியான தருணத்தில் உங்களுடன் பயணித்த யாரோ ஒருவரை 'காவு' கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 'விபத்து வேறு; அத்துமீறல் வேறு என்பதை இளையோர் உணர வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென பெற்றோர், குடும்பம், குழந்தை, பிற கடமைகள் உள்ளது என்பதை எந்த தருணத்திலும் மறக்க கூடாது. குறிப்பாக, சினிமாவை, சினிமாவாக மட்டும் பார்த்து கொண்டாடுங்கள்.