உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 3,500 சதுரடி கட்டுமானத்திற்கு விண்ணப்பிப்பது அவசியமா?

3,500 சதுரடி கட்டுமானத்திற்கு விண்ணப்பிப்பது அவசியமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சுயசான்று முறையில், 3,500 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு விண்ணப்பங்கள் அளிக்க வேண்டுமா என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்று, கட்டுமான துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்த, பொது கட்டட விதிகளின் அடிப்படையில் உரிய துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு கட்டட அனுமதி வழங்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கட்டட அனுமதி விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பெற, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இருப்பினும், உள்ளாட்சிகளிடம் குறைந்த பரப்பளவு வீடு கட்ட விரைவாக அனுமதி கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது. விதிமீறல் கட்டடங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியில், தமிழகத்திலும் சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.

புரிதல் தேவை

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில் 3,500 சதுரடி நிலத்தில், 2,500 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு, சுயசான்று முறையில் அனுமதி பெறலாம் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்த உரிய நடைமுறை விபரங்கள் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இதனால், 3,500 சதுரடி வரையிலான கட்டடங்கள் கட்ட அனுமதி பெற தேவையில்லை என்ற ரீதியில், மக்களிடம் கருத்து பரவி வருகிறது. இதன்படி, புதிய கட்டடம் கட்டுவோர், தானாக ஆட்களை வைத்து பணிகளை துவக்கி விடலாம் என்ற அளவுக்கு கருத்துகள் பரவி வருகின்றன. அரசின் இந்த அறிவிப்பின்படி, எப்படி கட்டட அனுமதி வழங்கப்படும் என்பதை, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடம் இதில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'விதிமீறலாக கருதப்படும்'

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய அறிவிப்பின்படி, 3,500 சதுரடி வரையிலான கட்டடங்கள் கட்டுவோர், அதற்கான விண்ணப்பம், வரைபடம், சான்றிதழ்களை உள்ளாட்சி அமைப்பில் தாக்கல் செய்ய வேண்டும்; அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இதன் அடிப்படையில், ஆன்லைன் முறையில் பெறப்படும் ஒப்புகை சீட்டை அடிப்படை அடையாளமாக வைத்து, கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். எந்த விண்ணப்பமும் தாக்கல் செய்யாமல் வீடு கட்டினால், அது விதிமீறலாகவே கருதப்படும். இது தொடர்பான நடைமுறை விபரங்களை, பொதுமக்கள் அறிய வெளியிடுவது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ