உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திட்டமிட்டு நடத்தப்படுகிறதா விமான வெடிகுண்டு மிரட்டல்?

திட்டமிட்டு நடத்தப்படுகிறதா விமான வெடிகுண்டு மிரட்டல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீப காலமாக, பல்வேறு விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரளியாகவே இருந்த போதிலும், இது திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த மிரட்டல்களால், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், பயணியர் உள்ளிட்டோர் பதற்றம் அடைவதுடன், டிக்கெட்டுகளை பயணியர் ரத்தும் செய்கின்றனர். அதனால், பல விமானங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.கடந்த மூன்று நாட்களில் மட்டும், 50க்கும மேற்பட்ட விமானம் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி, விமான பாதுகாப்பு துறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமானங்களில், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்துவது குறித்து, விமான போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்துள்ளது.

பின்னணி என்ன?

இதுகுறித்து, உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:விமானத்தில் கசப்பான அனுபவங்களை சந்தித்த பயணியர், விமான நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள், ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த நினைக்கும் நபர்கள், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பொதுவாக, மொபைல் போன்கள் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியும், மின்னஞ்சல் வாயிலாகவும் மிரட்டல் விடுப்பது வழக்கம். தற்போது, விபரம் தெரிந்த சிலர், 'டார்க்நெட்' என்ற, 'டார்க் பிரவுசர்' வாயிலாக, அடையாளத்தை மறைத்து, இந்த செயல்களில் ஈடுபட துவங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு முறைகள்

விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு, பெரும்பாலும் மின்னஞ்சல் வாயிலாகவே மிரட்டல் விடுக்கின்றனர். அந்த தகவல்களை, எஸ்.ஒ.பி., என்ற நிலையான இயக்க நடைமுறையை பின்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவோம். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்து, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் குழுவினர் விரைந்து வந்து, முழு சோதனையில் ஈடுபடுவர். குறிப்பிட்ட இடத்துக்கோ, விமானத்துக்கோ அல்லது பொதுவாகவோ வரும் மிரட்டல்களுக்கு ஏற்ப சோதனை செய்யப்படும். சில நேரங்களில், பணியாளர்களை திசை திருப்ப, ஒரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்வர். அதனால், விமான நிலைய முனையங்கள், கழிப்பறைகள், பயணியர் உடைமைகளை கையாளும் இடங்கள் என, அனைத்திலும் தீவிர சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விமானங்களுக்கு மிரட்டல் வரும் போது, அந்த விமானம், 'ஐசோலேசன் பே' பகுதிக்கு கொண்டு செல்லப்படும். பின், விமானத்தில் அங்குலம் அங்குலமாக பரிசோதனை செய்த பின் தான் இயக்க அனுமதிக்கப்படும். இதற்கு, 3 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். புரளி என தெரியும் வரை, அனைவரும் பதற்றமான மன நிலையில் தான் இருப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

5 மாதத்தில் 13 முறை

சென்னை விமான நிலையத்திற்கு, ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை, விமான நிலையம் மற்றும் விமானங்கள் என, 13 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சில மிரட்டல் அழைப்புகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளன.பிற விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட, மிரட்டல் மின்னஞ்சல்கள் இங்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதனால், இதெல்லாமே திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தகேம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இதன் பின்னணியில் இருந்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !