பாய்ச்சலில் இருந்து பின்வாங்குகிறாரா விஜய்? கட்சியை மீண்டும் மக்கள் இயக்கமாக மாற்றலாமா என கருத்து கேட்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றிவிடலாமா என, கரூரில் இருந்து ஆறுதல் பெற வந்த மக்களிடம், விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமை பிரசாரத்தை செப்டம்பர் மாதம் துவக்கினார். திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இதில் அதிகளவில் மக்கள், தொண்டர்கள் குவிந்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில், 27ம் தேதி நடந்த பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் இறந்தனர். கெடுபிடி இதையடுத்து, அவசரமாக வீடு திரும்பிய விஜய், அதன்பின் வெளியே வரவில்லை. பாதிக்கப்பட்டோரை சந்திக்க, கரூர் செல்வதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. கரூர் மாவட்ட காவல் துறையை அணுகி அனுமதி பெறும்படி, நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், கரூர் நெரிசல் சம்பவத்தில், உயிரிழந்தவர்களில், 33 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஐந்து ஆம்னி பஸ்களில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். அங்கு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்; கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. கட்சி பொருளாளர் வெங்கட்ராமன், தானே காரை ஓட்டி வந்த நிலையில், தனியார் விடுதி பாதுகாவலர்களுக்கு, அவர் யார் என தெரியவில்லை. போராட்டம் அவரது காரை உள்ளே விட மறுத்தனர். கடுப்பான அவர், விடுதியில் உள்ள நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தார். இதையடுத்து 10 நிமிட போராட்டத்துக்குப் பின், அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, தனது கையால், காபி, பிஸ்கெட் போன்றவற்றை விஜய் வழங்கினார். சால்வை அணிவித்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 10 நிமிடங்கள் ஒதுக்கி, ஆறுதல் கூறினார். கரூர் சென்று சந்திக்க முடியாததற்கு, தன் வருத்தத்தை தெரிவித்தார். அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, பல தடவை விஜய் கண்களில் நீர் பூத்தது. 'வாழ்நாளின் கடைசி வரை பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பேன்; வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவேன்; குழந்தைகள் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் உதவுவேன்' என்று ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தனிப்பட்ட முறையில் விஜய் அப்போது உறுதி அளித்தார். கூடவே, 'கடுமையான நெருக்கடிக்கிடையில் தான் த.வெ.க., நடத்தப்படுகிறது. அதனாலேயே, என் கூட்டத்துக்கு வந்த 41 பேர் உயிர் இழந்தனர். அந்த இழப்புகளால் ஏற்பட்ட வருத்தம், மிக விரைவாக மறையும் என தெரியவில்லை. பங்கேற்கவில்லை 'இருந்தாலும், கண் முன் நடந்த கொடூரத்தை மறக்க முடியாமல் தவிக்கிறேன். இதே வலியோடு, நீண்ட காலத்துக்கு கட்சியை வலிமையாக நடத்த முடியுமா, அதற்கான சூழல் அமையுமா என தெரியவில்லை. 'அதனால், கட்சியை தொடர்ந்து நடத்தலாமா அல்லது மீண்டும் மக்கள் இயக்கமாக மாற்றி விடலாமா என்ற குழப்பத்தில் தவிக்கிறேன். உங்கள் ஆலோசனையையும் கேட்டுவிட்டுத்தான் தெளிவான முடிவெடுக்க வேண்டும்' என, ஆறுதல் பெற வந்தோர் பலரிடம் நடிகர் விஜய் கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் பலரும் விழித்துள்ளனர். ஆனால், அங்கிருந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், கட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என விஜயிடம் கேட்டுக் கொண்டனர். ஆறுதல் நிகழ்ச்சி முடிந்ததும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அமர்ந்து, விஜய் மதிய உணவு சாப்பிட்டார். விஜய் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடன் இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது, கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.