உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதன்முதலாக ‛தினமலர் நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்

முதன்முதலாக ‛தினமலர் நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமலர் நாளிதழுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்அன்புள்ள டாக்டர் பத்மஸ்ரீ லட்சுமிபதி ராமசுப்பையர், ஆசிரியர்கள் மற்றும் மொத்த தினமலர் குடும்பத்துக்கும் என் வணக்கம்.அச்சமறியா இதழியல், அளவறியா சமூக சேவை என்ற இரண்டு உன்னத லட்சியங்களோடு 75 ஆண்டுகள் என்கிற சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ள தினமலர் இதழுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். திருவனந்தபுரத்தில் 1951ம் ஆண்டில் டி.வி.ராமசுப்பையர் இந்த மகத்தான தமிழ் நாளிதழை தொடங்கிய போது, என் தாத்தா திரு.சங்கர நாராயண ஐயருக்கு சொந்தமான ராயல் பிரின்டிங் ஒர்க்ஸ் அச்சகத்தில் தான் அப்பத்திரிகை அச்சிடப்பட்டது.தமிழ் எழுத்துகளின் அச்சுகளை ஒவ்வொன்றாக தேடி எடுத்து கோர்த்து வார்த்தைகளை உருவாக்க வேண்டிய நடைமுறை இருந்த அன்றைய காலகட்டத்தில், கேரள தேசத்தில் 3,000 பிரதிகள் அச்சிடப்பட்ட தினமலர், இத்தனை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அதற்கு அப்பாலும் விரிந்து பரந்து, தினமும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுகிறது என்றால், அன்றைக்கு எவ்வளவு வலுவான அஸ்திவாரத்தை ராமசுப்பையர் கட்டமைத்தார் என்பதை இன்றைய வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.என் தந்தை திரு எஸ்.என்.ராமசுப்ரமணிக்கு இப்போது 93 வயது. அவர் திருவனந்தபுரத்தில் உருவான முதல் பி.காம்., பட்டதாரிகளில் ஒருவர். சிறுவனாக இருந்தபோது, தன் தந்தையாரின் அச்சகத்தில் தினமலர் நாளிதழுக்காக மை படிந்த கரங்களால் அச்சுக் கட்டைகளை அடுக்கி வைத்து உதவிய காட்சிகளை நெகிழ்ச்சியோடு அவர் நினைவு கூர்கிறார். மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தற்போது சென்னையில் வசித்து வரும் என் தந்தையார், தினமலரின் நீண்ட நெடிய சாதனை பயணத்தில் தன்னுடைய சிறு பங்கும் இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறார். அவருடைய வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்க சொன்னார்.திரு.சங்கர நாராயண ஐயரின் வழித்தோன்றல்கள் என்ற முறையில், தேசியம், ஆன்மிகம், மக்கள் சேவை என்ற மூன்று துாண்களில் நின்று உண்மையை உரைக்கும் தினமலரின் சாதனை கண்டு, எங்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நிரம்புகிறது. மக்களின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு, அதை உலகறிய வெளிப்படுத்துவது பத்திரிகைகளின் பிரதான கடமைகளில் ஒன்று என்பர். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தினமலரை பார்க்கும்போது, அந்த தாரக மந்திரத்தை விட்டு நீங்கள் சற்றும் விலகாமல் பயணிப்பது தெளிவாகிறது.காந்திய சிந்தனைகளில் பற்று கொண்ட உங்கள் நிறுவனர் அன்றே மிகச்சரியாக சொன்னார்: 'வியர்வை சிந்தியும் வலிகளை அனுபவித்தும் செல்வம் ஈட்டுவதன் நோக்கமே, தேவையுள்ளவர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் அதன் மூலமாக சேவை செய்வதற்காகத்தான்!' தினமலரின் செய்திகளிலும், இணைப்பிதழ்களிலும், சமூக முன்னெடுப்புகளிலும் அந்த நோக்கம் சிறப்பாகவே பிரதிபலிக்கிறது.தினமலர் இன்னும் பலப்பல தசாப்தங்கள் சிறப்பான முன்னேற்றமும், தாக்கமும், அசைக்க முடியாத சமூகப் பிணைப்பும் கொண்டு மென்மேலும் வளர நாங்கள் மனமார வாழ்த்துகிறோம். தினமலரின் அச்சகங்களில் இருந்து வெளியே வரும் உண்மை செய்திகள், அவற்றின் நுட்பமான அலசல், தெளிவு ஆகியவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நம்பிக்கை தரும் வழிகாட்டியாக திகழ இறைவனை வேண்டுகிறோம்.ஜெயகுமார் கே.ஆர்த/பெ எஸ்.என்.ராம சுப்ரமணிதுரைப்பாக்கம் சென்னைஎஸ்.என். ராமசுப்ரமணித/பெ சங்கர நாராயண ஐயர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subramanian
செப் 06, 2025 07:51

வாழ்த்துகள்


KOVAIKARAN
செப் 06, 2025 07:43

நான் தற்போட்டது கோவையில் வசித்து வருகிறேன். எங்கள் பூர்விக ஊர், கோவில்பட்டிக்கு அருகில், அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் தாலுகாவில் இருந்தது. நான் 1966 ஆம் ஆண்டு, SSLC தேர்வில் வெற்றிபெற்றபின் திருநெல்வேலி மாவட்ட Employment Exchange-ல் பதிவு செய்துவிட்டு, இரவு அங்கே தங்கவேண்டியிருந்ததால், ஒரு சினிமா அரங்கிற்குச் என்று நடுஇரவு காட்சி முடிந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல புறப்பட்டபோது, அங்கே, தியேட்டருக்கு வெளியே, பஸ்ஸ்டாண்டிற்கு வெளியே மற்றும் உள்ளே, தினமலர் விற்பதற்கு அங்கங்கே சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததையும், மக்கள் வரிசையில் நின்று தினமலர் பத்திரிக்கை வாங்கிக்கொண்டு செல்வத்தையும் பார்த்தேன். அப்போது நேரம் அதிகாலை மணி 2.00. அன்றுதான் முதன்முதலில் நான் தினமலரை வாங்கிப் படித்தேன். அப்போது 1966 -ல் தினமலர் திருநெல்வேலி பதிப்பு ஒன்று தான் இருந்தது அன்று ஆரம்பித்த எனது தினமலர் வாசிக்கும் பழக்கம், இன்று பவள விழா கொண்டாடும் தினம் வரையும் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் அமெரிக்காவிற்கு இதுவரை ஆறு முறை சென்று வந்துள்ளேன். அங்கே நண்பகல் 12 - 1.00 மணி அளவில், அப்போது இங்கே நமது நாட்டில் மணி அடுத்த நாள் காலை 4.00 மணி இருக்கும். என்னுடைய Laptop ல் இன்டர்நெட்டில் தினமலர் படித்துவிட்டுத்தான் மத்திய உணவே அருந்துவேன். அந்த அளவிற்கு நான் தினமலருக்கு அடிமையாகிவிட்டேன் என்பதில் நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நமது மாகாணத்தில் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் குற்றம் குறைகளை அஞ்சாமல் எங்கள் பத்திரிக்கையான தினமலர் மூலம் தெரிவிப்பதால், அன்றைய அரசும், இன்றைய அரசும் அவர்களது விளம்பரங்களை தினமலருக்கு கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால், தினமலருக்கு ஏற்பட்ட வருமான இழப்பு ஏராளம். ஆனால், எங்களுக்கு பணம் முக்கியமில்லை, உண்மையை உரக்கச் சொல்லுவதே முக்கியம் என்று எண்ணி, இன்று வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுவே தினமலர் உண்மையின் உரைகல் என்று வாசகர்களால் பெருமையகாக அழைக்கப்படுகிறது. மற்றொரு விஷயமும் இங்கே குறிப்பிட வேண்டும். மற்ற பத்திரிக்கைகள் சினிமாவிற்கும், நடிகர்- நடிகைகளுக்கும் முக்கியம் கொடுத்து பல பக்கங்களை ஒதுக்கி, வாசகர்ளை முகம் சுளிக்க வைப்பது ஒன்றை தினமலர் தினமும் செய்வதில்லை. ஞாயிறு வாரமலரில் வரும் சிறுகதைகள், தொடர்கதைகள், அந்துமணி கேள்வி-பதில்கள் அந்துமணியின் கட்டுரைகள், என பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். சிறுவர்மலர், ஆன்மிக மலர் என்று பலவகையான இணைப்புகளால் கட்டப்பட்ட மலர்மாலையை அணிந்துகொண்டு வீறு நடை போட்டு நடந்து வந்து இன்று 75 வயது பவள விழா கொண்டாடும் தினமலர் நிறுவனரின் வழித்தோன்றல்களுக்கும், திணமலர் வெற்றிக்கு உழைத்து வந்த இன்றும் உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்குக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த பூமி உள்ளவரை தினமலரும் இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.


Durai Kuppusami
செப் 06, 2025 07:36

வாழ்த்துக்கள்... மேன்மேலும் சிறக்க


குமரி குருவி
செப் 06, 2025 07:17

நீடுழி வாழட்டும் வளரட்டும் நல்வாழ்த்துக்கள்


Arul. K
செப் 06, 2025 07:16

எத்தனையோ தாக்கங்கள், போட்டிகள், மக்களிடையே வாசிப்புத்தன்மை குறைந்துவருதல் இதை எல்லாம் தாண்டி வளர்ந்து இருக்கும் தினமலருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


suresh kumar
செப் 06, 2025 07:08

வாழ்த்துக்கள்


N Annamalai
செப் 06, 2025 06:26

அருமை வாழ்த்துக்கள் .உங்கள் முன்னோர் இந்த நாளிதழுக்கு செய்த சேவை மகத்தானது .உங்கள் தந்தையிடம் எங்கள் அன்பை சொல்லுங்கள் .நன்றிகள் .


Pooranan Ramasamy
செப் 06, 2025 05:44

வாழ்த்துக்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை