மீனவர்கள் பிரச்னை குறித்து பேசும்போது, ம.தி.மு.க., - எம்.பி., வைகோவுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க மறுக்கப்பட்ட அதேவேளையில், அடுத்து பேசிய சமாஜ்வாடி எம்.பி.,க்கு மட்டும், பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதால், ராஜ்யசபாவில் சலசலப்பு எற்பட்டது.ராஜ்யசபாவில் பொதுவாக ஜீரோ நேரத்தில், விதிகளின்படி, 3 நிமிடம் மட்டுமே பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும். அதன்பின் தானாக மைக் ஆப் செய்யப்படும். பின், அவர்கள் என்ன பேசினாலும், அது பதிவாகாது. தொடர்ச்சியாக அடுத்த எம்.பி., பேச அழைக்கப்படுவது பழக்கம். தலைகள் துண்டிப்பு
இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில் ஜீரோ நேரத்தில், ம.தி.மு.க., - எம்.பி., வைகோ பேசினார். உடல்நலம் குன்றியிருந்த நிலையில் காணப்பட்ட அவர், கைகளிலும் இடுப்பிலும் பிடிமானம் அளிக்கும் மருத்துவப் பட்டைகளை அணிந்திருந்தார். அவர் பேசுகையில், ''தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ச்சியாக தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் வருகின்றனர். இப்போதுகூட தமிழகத்தைச் சேர்ந்த 83 மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ளனர்.கடந்த 2014ல், இந்தியா - இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது தங்கள்பிடியில் இருந்த தமிழக மீனவர்களிடம், 'இந்த போட்டியில் இலங்கை தோற்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்' என்று, இலங்கை கடற்படையினர் எச்சரித்துள்ளனர். இச்செய்தி, பத்திரிகைகளிலும் வெளியானது.அந்த போட்டியில் இலங்கை தோற்கடிக்கப்பட்டது. அன்றைய இரவு 4 மீனவர்கள் தாக்கப்பட்டு, அவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டு, உடல்கள் கடலில் வீசப்பட்டன.கடந்த பல ஆண்டுகளாகவே எண்ணற்ற தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம் கூட, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஒரு மீனவர் தாக்கப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டார். இன்னொரு மீனவரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இந்த நிலை தொடரும்போதே புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள், இலங்கை சிறையில் இருப்பதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இது குறித்து பிரதமர்,வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, ''நமது கடல் எல்லை பரப்புக்குள்ளே இலங்கை கடற்படையினர் நுழைந்து, நம் நாட்டு மீனவர்களை கொன்று, கடல் தண்ணீரில் மிதக்க விடுகின்றனர். அப்படியானால், தமிழக மீனவர்கள், இந்திய குடிமக்கள் இல்லையா?'' என்று கேட்டேன்,'' என வைகோ பேசிக் கொண்டிருந்தார். இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கான நேரம் முடிவடைந்தது. உடனடியாக, மைக் ஆப் செய்யப்பட்டது. ஆனாலும் விடாமல் பேசிக் கொண்டிருந்தார் வைகோ. கடும் வாக்குவாதம்
உடனே, அடுத்து பேச வேண்டியவரான சமாஜ்வாடி கட்சியின் மூத்த எம்.பி., ராம்கோபால் யாதவ் பேச அழைக்கப்பட்டார்.அப்போதும் வைகோ, ''நான் இந்த விஷயத்தை பேசுவதற்காகவே, மருத்துவமனையில் இருந்து, நேரடியாக இந்த சபைக்கு வந்திருக்கிறேன், உடல்நலம் குன்றிய நிலையிலும் கடமையாற்ற வந்துள்ள எனக்கு ஓரிரு நிமிடங்கள் கொடுத்தால் குறைந்து போய்விடுவீர்களா?'' எனக் கேட்டார். ஆனாலும் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்தும் வைகோ பேசியபடி இருக்க, ராம் கோபால் யாதவை பேசும்படி, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் வலியுறுத்தினார். இதையடுத்து சபையில் கூச்சல் நிலவியது. அதன்பின், ராம் கோபால் யாதவ் பேசத் துவங்கினார். அதற்குள் அவருக்கான நேரம் முடிந்து விட்டது. ஆனாலும், அவர் தொடர்ச்சியாக பேச அனுமதிக்கப்பட்டார். இதற்கு எதிராகவும்சில எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். இதைப் பார்த்த அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, துணைத் தலைவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். ''நீங்கள், வைகோ பேசும்போது மட்டும், கூடுதல் நேரம் தர மறுத்தீர்கள். ஆனால், ராம்கோபால் யாதவுக்கு, எந்த அடிப்படையில், பேச அனுமதிக்கிறீர்கள்? வைகோ உடல்நலம் குன்றிய நிலையிலும், சபையில் பேச வந்திருக்கிறார். அவர் மீது கருணையுடன் பேச அனுமதிக்காதது ஏன்?தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றி சபையில் பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? இவ்வாறு அவர் வாதிட்டார். தொடர்ந்து சபையில் கூச்சல் நிலவியது.- நமது டில்லி நிருபர் -