உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள்; 2025 இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'பதவிக் காலம் முடிவடைய உள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, சிறப்பு அலுவலர்கள் நியமித்து, 2025ம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும்' என, ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது.இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்ட ஊரக உள்ளாட்சிகள் பதவிக் காலம், 2026 செப்., மாதம் முடிவடைகிறது.இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக் காலம் முடிவடைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.இது குறித்து, ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
பதவிக் காலம் முடியவுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. குறிப்பாக, சில ஊராட்சி பகுதிகளை, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் இணைப்பதற்கான பணிகள் நடக்க வேண்டியுள்ளன. இதனால், பதவிக் காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊராட்சிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின், 2025 இறுதியில் ஒருங்கிணைந்த அளவில் அல்லது பதவிக் காலம் முடிந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -