மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025
கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து, ஒரே நாளில் திருமணத்தையும் முடித்து, 'லவ் ஜிகாத்' என்ற கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் தலையீடை தொடர்ந்து, முஸ்லிம் வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி என தெரிந்தும் திருமணத்தை நடத்தி வைத்த மத தலைவர்கள், வாலிபரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது.கிருஷ்ணகிரியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள கடையில், முஸ்லிம்பூரை சேர்ந்த அப்துல் கைப், 21, என்பவர், மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். அவர், டெம்போ டிரைவரின் மகளான, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். அக்., 23ல், சிறுமியை, அப்துல் கைப் கடத்தி சென்றார். சிறுமியின் தந்தை கிருஷ்ணகிரி மகளிர் போலீசில், அக்., 25ல் அப்துல் கைப் மீது புகார் அளித்தார். இந்நிலையில், அக்., 27ல் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்தனர். ஸ்டேஷனுக்கு, சிறுமியுடன், அப்துல் கைப், அவரது பெற்றோர் உட்பட, 15 பேர் வந்தனர். சிறுமி முஸ்லிம் அணியும் புர்கா அணிந்திருந்தார். மெஹந்தியும் போடப்பட்டிருந்தது. தொடர்ந்து, விசாரித்த போலீசார், சிறுமியை தந்தையிடம் ஒப்படைப்பதாகவும், 18 வயது முடிந்த பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அப்துல் கைப் பெற்றோரிடம் எழுதி வாங்கினர். ஆனால், சிறுமியை அப்துல் கைப்புடன் அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, குழப்பத்துடன் வீடு திரும்பினார். பின், அக்., 29ல் மீண்டும் கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டு, சிறுமியை வரவழைத்து, தந்தை தன்னுடன் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.சிறுமியிடம் விசாரித்தபோது, 'என்னிடம் அப்துல் கைப் நைசாக பேசி, பெங்களூருவுக்கும், அங்கிருந்து முஸ்லிம்பூர் அழைத்து சென்றார். அக்., 27 இரவு, பச்சை கோடு போட்ட ரிஜிஸ்டரில் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தனர். அதில், உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு புரியவில்லை. 'பின்னர் அப்துல், அவரது அப்பா, அம்மா கையெழுத்திட்டனர். எனக்கு பெயரை மாற்றினர். என்னை, 'நிக்கா' என்ற திருமணம் செய்வதாக கூறினர். அங்கு பலருக்கு கறி விருந்து பரிமாறினர். பின், எனக்கு முதலிரவு ஏற்பாடு செய்தனர். நான் மறுத்தும் கட்டாயப்படுத்தி முதலிரவு நடந்தது' என, கூறியுள்ளார். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்த சிறுமியின் பெற்றோர், கிருஷ்ணகிரி மாவட்ட வி.எச்.பி., நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'அக்., 27ல் போலீசார், சிறுமியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு பதியவில்லை. மாறாக எங்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பினர். சிறுமியை காப்பகத்தில் சேர்க்காமல், அப்துல் கைப்புடன் அனுப்பினர். அன்று இரவே அவர்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர். 'சிறுமியை சீரழித்து கட்டாய மதமாற்றம் செய்த அப்துல் கைப், அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள், இதற்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வி.எச்.பி., தலைவர் சாந்தகுமார் கூறுகையில், ''காஷ்மீர் முதல் குமரி வரை இப்படி தான் நடக்கிறது. சிறுமியரை குறிவைத்து ஆசை காட்டி, மோசடியாக காதல் வலையில் வீழ்த்தி, ஜிகாத் குழுவினர் திருமணம் செய்கின்றனர். சில மாதங்களுக்கு பின், 'தலாக்' செய்து விடுகின்றனர். ''மத்திய அரசு சட்டம் இயற்றியும் இவர்கள் மாறவில்லை. கிருஷ்ணகிரியிலும், 17 வயது பெண்ணை, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து, 'லவ் ஜிகாத்' கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பாமல், உறுதுணையாக இருந்த கிருஷ்ணகிரி மகளிர் இன்ஸ்பெக்டர் முதல் கடைநிலை போலீசார் வரை, அனைவரையும் 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். ''இஸ்லாமிய மத போதகர்கள் மற்றும் அப்துல் கைப் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கடந்த அக்டோபரில், சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகார்படி, இரு தரப்பினரையும் அழைத்து, 18 வயது முடிந்த பின் திருமணம் செய்யலாம் என எழுதி வாங்கி, போலீசார் அனுப்பி உள்ளனர். ஆனால், சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளதாக தற்போது புகார் அளித்துள்ளனர். அதன்படி, சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அப்துல் கைப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலிபரின் பெற்றோர், திருமணத்தை நடத்திய மத தலைவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் மீது அளிக்கப்பட்ட புகார்படியும் விசாரணை மேற்கொள்ளப்படும். - தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பி., - நமது நிருபர் -
04-Nov-2025