வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மருத்துவ கல்லூரிகளை மூடும் எண்ணமா? அந்த அமைச்சருக்கு வேறு என்ன வேலை?
busy in private practice, fellows are paid from tax payers money, dismiss them
சென்னை: பேராசிரியர்கள் வருகைப்பதிவு குறைவு, காலிப் பணியிடங்கள் நீடிப்பு உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, 35 மருத்துவ கல்லுாரிகளுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.நாட்டில், 700க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., மேற்கொண்டு வருகிறது. 75 சதவீதம்
கல்லுாரிகளில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.அதேபோல, மருத்துவ கல்லுாரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய, ஆதாருடன் கூடிய, 'பயோமெட்ரிக்' முறை உள்ளது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லுாரி அலுவலர்களின் வருகைப்பதிவு, 75 சதவீதம் இருப்பது அவசியம். இல்லாத பட்சத்தில், அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.இந்நிலையில், 2025 - 26ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலுக்கான ஆய்வை, தேசிய மருத்துவ ஆணைய குழு மேற்கொண்டது. அதில், சென்னை மருத்துவ கல்லுாரியை தவிர்த்து, 35 மருத்துவ கல்லுாரிகளிலும் குறைந்த வருகைப்பதிவு, பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.இதையடுத்து, சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார், செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி, வேலுார், தேனி, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர்.சிவகங்கை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, அரியலுார், திண்டுக்கல், கோவை, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளிட்ட 35 அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இதில், 26 மருத்துவ கல்லுாரிகள் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள, ஒன்பது கல்லுாரிகளுக்கு, வரும் 16ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் உரிய விளக்கம் அளித்து, குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை எனில், மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளது. உரிய விளக்கம்
அனைத்து மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படாவிட்டாலும், ஒருசில கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்தாகலாம் என்று, கூறப்படுகிறது. அவ்வாறு ரத்தானால், அங்கு புதிதாக மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது: இது, வழக்கமான நோட்டீஸ் தான். பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வருகைப்பதிவு குறையவில்லை. மாறாக பணியிட மாற்றம், தொடர் விடுப்பு போன்றவை காரணமாக, சில இடங்களில் போதிய வருகைப்பதிவு இல்லை. அது சரி செய்யப்பட்டு, ஆணையத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.விரைவில், ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இதனால், மாணவர் சேர்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கான உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை, உரிய நேரத்தில் நடத்தி முடிக்க தவறியதே, மருத்துவ கல்லுாரிகளில், பேராசிரியர் காலி பணியிடங்கள் அதிகரிக்க காரணம் என, மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், தேசிய மருத்துவ ஆணையம் கோரிய விளக்கத்திற்கு உரிய பதிலை உடனடியாக அளிக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரிகளில் நிலவும் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.- தினகரன்,அ.ம.மு.க., பொதுச்செயலர்.
தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட மருத்துவ கல்லுாரிகள் மற்றும், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ள, 10 மருத்துவ கல்லுாரிகளில் கூடுதலாக, 50 இடங்களுக்கு அனுமதி கேட்டு, என்.எம்.சி.,யிடம், தமிழக அரசு விண்ணப்பித்தது. இப்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டு இருப்பதால், புதிதாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.
அரசு டாக்டர்கள் கூறியதாவது: தேவையான அளவு பேராசிரியர்களோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல், கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது என்பதையே, என்.எம்.சி., நோட்டீஸ் உறுதிப்படுத்துகிறது. அதேநேரத்தில், கல்லுாரிகளை பொறுத்து, 5 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில், 'டீன்' நியமனம் இருந்தாலும், அடுத்தடுத்த பதவிகளில் மருத்துவ கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. நான்கு இணைப் பேராசிரியர்கள் பணியிடங்கள் இருந்தால், ஒருவர் மட்டுமே அப்பணியில் உள்ளார். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், பிசியாலஜி துறைகளில், இரண்டாண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பதவி உயர்வை சரியான நேரத்தில் வழங்கியிருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது.இதனால், முதுநிலை படித்துள்ள இளம் டாக்டர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கூடுதல் சம்பளமே வழங்காமல் ஒப்பந்த முறையில், இரண்டாண்டு காலத்திற்கு முதுநிலை டாக்டர்களை நியமிக்கலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் படித்து முடித்து வெளியேறும் முதுநிலை டாக்டர்களை, இம்முறையில் ஒப்பந்தம் செய்தால், 75 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்பலாம். இதை செய்ய விடாமல், சிலர் வயது நீட்டிப்பை கொண்டு வரவே விரும்புகின்றனர். தமிழக அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை எனில், தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு, அடியோடு சிதைந்து போய்விடும். உடனே, கல்லுாரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். --அண்ணாமலை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்
மருத்துவ கல்லூரிகளை மூடும் எண்ணமா? அந்த அமைச்சருக்கு வேறு என்ன வேலை?
busy in private practice, fellows are paid from tax payers money, dismiss them