உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குட் நைட் ஆசாமிகளுக்கு குட் பை :அமைச்சர் சிவசங்கர் அதிரடி

குட் நைட் ஆசாமிகளுக்கு குட் பை :அமைச்சர் சிவசங்கர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமைச்சர் சிவசங்கர், தனக்கு தினமும் 'வாட்ஸாப்'பில், படத்துடன், 'குட் மார்னிங், குட் நைட்' என தகவல் அனுப்பிய, 97 பேரின் மொபைல் எண்களை, அதிரடியாக 'பிளாக்' செய்துள்ளார். சமீபகாலமாக, அனைவரது வாழ்விலும், 'வாட்ஸாப்' முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை, அதில் பகிரப்படுகிறது. ஆனால் சிலர், தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு, மரியாதை நிமித்தமாக, காலை வணக்கத்தை, பல்வேறு 'பஞ்ச்' வசனங்கள், ஒழுக்க நெறிகள், தன்னம்பிக்கை வாசகங்கள், அழகிய படங்களுடன் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும், சிலர் அதை ரசித்து ஏற்று, பதில் அனுப்புகின்றனர். வேறு சிலர், அதை பார்த்துவிட்டு, அழித்து விடுகின்றனர். இதெல்லாம் வேலை இல்லாதவர்களின் வேலை என நினைத்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தன் மொபைல் போனுக்கு, தினமும் 'குட் மார்னிங், குட் நைட்' சொல்லி படங்களை அனுப்பியவர்களின் மொபைல் எண்களை பிளாக் செய்துள்ளார். கடந்த 2022ல் இருந்து, இதுவரை 97 பேரின் மொபைல் எண்களை 'பிளாக்' செய்துள்ளார். இது குறித்து, அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: அமைச்சர், வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருப்பவர் அல்ல. தன் தொகுதி பணிகள் மட்டுமின்றி, மாவட்ட அளவில் கட்சி பணிகளையும் கவனிக்க வேண்டி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், துறை அதிகாரிகள், கட்சித் தலைமை, மூத்த நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என, அமைச்சர் எந்நேரமும் பிசியாக உள்ளார். அவரது 'வாட்ஸாப்' எண்ணுக்கு, முக்கிய தகவல்களை அதிகாரிகள் அனுப்பி வைப்பர். கட்சி நிர்வாகிகளும் முக்கிய பணிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பர். அவற்றை படித்து பார்த்து பதில் தெரிவிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. இந்நிலையில் சிலர், காலை வணக்கம், மாலை வணக்கம், இன்றைய ராசி பலன், நல்ல நேரம் போன்ற தகவல்களை அவருக்கு அனுப்புகின்றனர். அதைப் படிக்க அவருக்கு நேரமில்லை. எனவே, அது போன்ற நபர்களின் மொபைல் எண்களை, அமைச்சர் 'பிளாக்' செய்து வருகிறார். அவர் 'பிளாக்' செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை