உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; பக்தி பரவசத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; பக்தி பரவசத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில், லட்சக்கணக்கானோர், பக்தி பரவசத்துடன் குவிந்ததால், சித்திரை திருவிழாவை போல, மதுரையே ஆன்மிக விழாக்கோலம் பூண்டது.மாநாட்டில் முருகக் கடவுள் குறித்து பக்தர்கள் எழுப்பிய, 'வெற்றி வேல்... வீரவேல்... கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...' போன்ற கோஷங்கள் விண்ணை முட்டின.மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே மாநாட்டிற்காக, 8 லட்சம் சதுரடி பரப்பில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. இதில், 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன்பின், 10 அடி உயரத்தில் பெரிய மேடையும் அமைக்கப்பட்டது. 'குன்றம் காக்க... கோவில் காக்க...' என்ற தலைப்பில், வேலுடன் முருகன் நின்ற நிலையில், அதன்பின் கோபுரமும், குன்றமும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பதாகை பக்தர்களை பரவசப்படுத்தியது.

அலை அலையாக

மதியம், 3:00 மணிக்கு தான் மாநாடு என்றாலும், காலை, 10:00 மணி முதலே வண்டியூர் டோல்கேட் மைதானத்திற்கு பக்தர்கள் வருகை தந்தனர். மதியம், 3:00 மணியளவில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாய், அலை அலையாய் மைதானத்தில் குவிந்தனர். சில நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்த, மைதானத்திற்கு முன் மூலஸ்தானத்துடன் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த முருகனின் அறுபடை வீடுகளின் அருட்காட்சி விக்ரகங்கள், நேற்று மாநாட்டு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாநாட்டிற்கு வந்த பக்தர்கள் மேடைக்கு முன் வந்து அறுபடை முருகனை மனமுருகி வழிபட்டனர். மதியம், 3:00 மணிக்கு பம்பை இசை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது. சிறிய மேடையில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மாலை, 4:00 மணிக்கெல்லாம் மைதானத்தில் அமைக்கப்பட்ட, 50 கேலரிகளிலும் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர். முருக பக்தர்கள் பலர் பால்குடம், காவடி எடுத்து வந்து மாநாட்டில் பங்கேற்றனர். மாலை, 5:00 மணிக்கு மாநாட்டின் சிறிய மேடையில் ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகளும், பிரதான பெரிய மேடையில் மடாதிபதிகள், ஆதீனங்கள், சாதுக்களும் அமர்ந்தனர். பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்ன தாகவே மேடையில் வந்து அமர்ந்தார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தனர்.மேடையில் இருந்த ஆதீனங்கள், சாதுக்களின் காலில் விழுந்து பவன் கல்யாண் வணங்கினார்.

லட்சம் இருக்கை

மாலை, 5:00 மணிக்கே அரங்கத்தில் போடப்பட்டிருந்த ஒரு லட்சம் இருக்கைகளும் நிரம்பின. அதற்கு மேல் வருபவர்கள் அமர தரை விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர்.ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். பின்னர் ஆதீனங்கள் பேசினர். தொடர்ந்து புராண, இதிகாச கலைநிகழ்ச்சிகள், நாட்டியம், காவடி ஆட்டம், சூரசம்ஹார நடனம் போன்றவை நடந்தன.தொடர்ந்து, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத தலைவர் வன்னியராஜன், ஹிந்து முன்னணி பொருளாளர் பக்தவத்சலம், ஹிந்து முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் கனிமொழி பேசினர்.ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து ஓட்டுவங்கியை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அறுபடை வீடுகளின் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

அ.தி.மு.க., பங்கேற்பு

இம்மாநாட்டிற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். அக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், பங்கேற்ற முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்களுக்கும் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேடையில் நன்றி தெரிவித்தார்.

தன்னார்வலர்கள்

மாநாடு நடந்த வளாகத்தில் பக்தர்களை வழிநடத்துவதற்காக பாதுகாப்பு, சுகாதாரம், மைதானம், போக்குவரத்து, பார்க்கிங் உள்ளிட்ட 27 குழுக்களை உருவாக்கி 2,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஹிந்து முன்னணி நியமித்திருந்தது. அவர்கள் பக்தர்களை அன்பாக வழிநடத்தினர். கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்குப்படுத்தினர். மாநாட்டு மேடை அருகில் போலீஸ் பாதுகாப்பு இல்லை என்ற புகாரும் எழுப்பப்பட்டது. அங்கு கூட்டத்தை தன்னார்வலர்கள் ஒழுங்குப்படுத்தினர். இதுதவிர, 13 இடங்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 10 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

கந்த சஷ்டி கவசம்

மாநாட்டில் நிகழ்ச்சியின் நிறைவாக லட்சக்கணக்கானோர் ஒரே அரங்கில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். கனமழை பெய்ய போவது போல மேகம் கறுத்திருந்த போதும், மழை எதுவும் பெய்யாமல் நிகழ்ச்சி அமைதியாய் எந்த சலசலப்புமின்றி கட்டுப்பாடுடன் நிறைவடைந்தது.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 07:56

அங்கே கூடிய கூட்டம் இந்து மக்கள்.. கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.. அதனால் கூட்டம் நல்லபடியாக முடிந்தது... அவர்கள் அண்டாவை திருடி கொண்டு ஓடும் கூட்டமல்ல.. அங்கே கூடிய கூட்டம் குவாட்டர் ஓசி பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டமல்ல.. கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய ஆட்களுக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக ஆப்பு வைப்பார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2025 06:32

200 ரூபாய் ஊபிஸ்களின் புலம்பல், வேன்கள், பஸ்கள், லாரிகளில் ஆட்கள் வரவில்லை, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி சப்ளை இல்லை, பண பட்டுவாடா இல்லை பின்னே எப்படி இத்தனை பெரிய கூட்டம் நடைபெற்றது


சண்முகம்
ஜூன் 23, 2025 03:59

தெலுங்கர்களிடம் திருப்பதியில் இருக்கும் தமிழ் கடவுள் முருகன் கோயிலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


chanakyan
ஜூன் 23, 2025 06:40

ஏன், அதுவும் நாசமாய் போகவா? திருப்பதி இன்று இவ்வளவு வசதிகளுடன் நன்றாக பராமரிக்கப்படுவதற்கு காரணமே அது ஆந்திராவிடம் சென்றதால் தான். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் எதிர்ப்புக் கொள்கை உள்ளவர்களிடம் ஆடசியைக் கொடுத்த நம் மாநிலத்தில் திருப்பதி போன்ற கோவில்கள் வராமல் போனது இந்துக்கள் செய்த அதிர்ஷ்டம். பழனியையும் திருப்பதியையும் ஒப்பிட்டுப்பார்த்தால் விஷயம் புரியும்.


Savitha
ஜூன் 23, 2025 12:25

திருப்பதியில் இருப்பது பெருமாள் என்பது கோவிலுக்கு போனவர்களுக்கு தெரியும், நிர்மால்ய சேவை என்று ஒன்று அதிகாலை நடக்கும், அப்போது, பெருமாள் அலங்காரம் இன்றி, வெறும் சிலா வடிவில் அபிஷேகம் நடக்கும், அப்போது அது பெருமாள் வடிவம் என்பதை கண்கூடாக பார்க்கலாம், கடவுள் நம்பிக்கை இல்லாத , கோவிலுக்குள் போகவே போகாத உங்களை போன்றவர்கள் இங்கு வந்து , அது முருகன் கோவில் என்று கருத்து போடுவதை நிறுத்தி கொள்வது நல்லது, உங்கள் அறியாமையை இங்கு வந்து பறை சாற்ற வேண்டிய அவசியம் என்ன?


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 21:40

மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் கூட வெங்கடாஜலபதி பற்றி கூறப்பட்டுள்ளது. அதற்கு முன் முருகன் பற்றிய பாடல் ஏதுமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை