சென்னை : “வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழக காங்கிரஸ் அதிகாரத்துடன் நெருங்கியிருக்கும்,” என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, கோவா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல் முறையாக, சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழக காங்கிரசில், உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், கோஷ்டி தலைவர்களை, அவர் தனித்தனியாக சந்தித்து பேசினார். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.பி.,க்கள் விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த், முன்னாள் எம்.பி., விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசியவர்கள், 'கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். கிராம கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், 100 சதவீதம் முழுமை பெற வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற 25 தொகுதிகளை விட, கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும்' என வலியுறுத்தினர். அதற்கு கிரிஷ் சோடங்கர் எந்த பதிலும் தெரிவிக்காமல், அமைதியாக கேட்டுக் கொண்டார்.
அமைச்சரின் நிதி அல்ல!
கட்சியை பலப்படுத்த, அடிமட்ட அளவிலிருந்து, மறுசீரமைப்பு நிகழ்த்த உள்ளோம். கட்சி தொண்டர்களின் உழைப்பால், 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழக காங்கிரஸ் அதிகாரத்துடன் நெருங்கியிருக்கும்.தேசிய கல்விக் கொள்கை என்பது, தமிழகத்தின் பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. கல்வியை காவிமயமாக்க பா.ஜ., துடிக்கிறது. தனிப்பட்ட மொழி திணிப்பை, நாங்கள் என்றும் எதிர்ப்போம். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், மக்களும், இளைய சமுதாயமும், அவர்களுக்கு என்ன தேவை என்பதை, முடிவெடுக்க வேண்டும்.அரசியலமைப்பு சட்டத்தை, மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. மறுசீரமைப்பு வாயிலாக, தென் மாநிலங்களை, மத்திய அரசு தண்டிக்க பார்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என சொல்ல, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தன் சொந்த நிதியில் இருந்து கொடுக்கவில்லை. - கிரிஷ் சோடங்கர்,காங்., மேலிட பொறுப்பாளர்