உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வலை வளை: பணம் கொட்டும் பானிபூரி

வலை வளை: பணம் கொட்டும் பானிபூரி

பணம் கொட்டும் பானிபூரி: ஐ.ஐ.டி., பட்டதாரிக்கு அதிர்ச்சி

ஐ.ஐ.டி., பட்டதாரியான வைஷ்ணவி ஸ்ரீவஸ்தவ், பானிபூரி வியாபாரியிடம் பேசியபோது, அவர் ஒரே கடையிலிருந்து மாதம் 1.2 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார். தினமும் மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை, 6 மணி நேரமே வேலை; அவருக்கு அவரே முதலாளி. இன்னும் 3 கடைகள் இருக்கின்றன. மொத்த மாத லாபம் 4.5 லட்சம் ரூபாயை தாண்டுகிறது. சொந்த வீடும், 'ஸ்கார்ப்பியோ' காரும் உள்ளன. 'இது தான் கார்ப்பரேட் தொழிலாளிக்கும் தொழில்முனைவோருக்கும் இருக்கும் வித்தியாசம்' என்கிறார், வைஷ்ணவி. அவரது பதிவை பார்த்த வலைதள பிரியர்கள், தயாரிப்பு நேரம், வெயில், மழை, நிலையற்ற வருமானம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

8 மணி நேர முயற்சியில்: வானில் வரைந்த ஓவியம்

'தி பைலட் பிகாசோ' என இணையத்தில் அறியப்படும் அமெரிக்க விமானி பெஞ்சமின் மெக்டேனியல், மிகவும் எதிர்பார்க்கப்படும், 'ஜிடிஏ 6' வீடியோ கேம் விளையாட்டுக்காக, வானில் ராட்சத ஓவியம் வரைந்தார். இந்த ஓவியம், 'ப்ளைட் ரேடார்24' போன்ற விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் சேவைகளில் காணக்கூடியதாகும். இந்த ஓவியத்தில், காற்றில் மிதக்கும் ஒரு ஹெலிகாப்டருக்குக் கீழே, 'ஜிடிஏ 6' சின்னமும் இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் ஆர்கன்சாஸின் பென்டன்வில் விமான நிலையத்திலிருந்து காலை 11:29-க்கு செஸ்னா விமானத்தில் புறப்பட்ட பெஞ்சமின், திட்டமிட்ட பாதையில் 8 மணி நேரம் 8 நிமிடங்கள் பறந்தார். அவர் வரைந்த வான் ஓவியத்தில், முதலை, பனை மரங்கள், ஸ்போர்ட்ஸ் கார், பிகினி அணிந்த பெண் போன்ற புளோரிடா அம்சங்களும் இடம்பெற்றன. 'ஜிடிஏ.,6க்காக 11 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்' என்று அவர் பதிவிட்டார். இணையவாசிகள் அவரது முயற்சியைப் பாராட்டினர்.

தாய் வீட்டில் பண்டிகை: வலைதளங்களில் விவாதம்

'திருமணமான மகள்கள் பண்டிகைகளைத் தங்கள் பெற்றோருடன் கொண்டாட முடிகிறதா' என்ற கேள்வியை எழுப்பிய இந்தியப்பெண் ஷெபாலி, சமூக வலைதளங்களில் விவாதத்தைத் தொடங்கியுள்ளார். 'மணமான ஆண்கள் பெற்றோருடன் குடும்ப மரபுகளைப் பின்பற்ற முடிகிறது; பெண்கள் பண்டிகைகளைக் கணவர் வீட்டில் கழிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது ஏன்?' என்பது அவரது கேள்வி. 'திருமணம், பெற்றோர் மீதான மகளின் பொறுப்பை மாற்றுகிறதா, எங்கே கொண்டாடுவது என்பதில் ஆண், பெண் இருவருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டுமா?' என்றும் அவர் கேட்கிறார்.'திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெற்றோர் என்ன ஆவார்கள், ஒவ்வொரு தீபாவளி, ஹோலியையும் தனியாகவே கழிக்க வேண்டுமா?' என்றும் கேட்கிறார் ஷெபாலி. அவரது கேள்விகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வலைதள பிரியர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

துாக்கத்தில் சாம்பியன் ஜினியா: பரிசளித்தது மெத்தை நிறுவனம்

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி, 'வேக்பிட்' மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்திய துாங்கும் போட்டியில் பங்கேற்றார். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அனுப்பியதில் கடைசி 10 பேருக்கு இடையே இறுதிப்போட்டி நடந்தது. இதில் வென்ற ஜினியாவுக்கு, 9.6 லட்சம் ரூபாய் பரிசும், இலவசமாக ஒரு சுற்றுலா வாய்ப்பும் கிடைத்தது. கூடவே, சாம்பியன் பட்டமும் கிடைத்தது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற 10 பேரின் 60 நாள் துாக்கத்தை இயந்திரங்கள் கொண்டு கண்காணித்து, தினமும் 9 மணி நேரம் ஆரோக்கியமான துாக்கம் துாங்கியவர் என்ற முறையில் வெற்றியாளரை தேர்வு செய்தோம் என்கிறது நிறுவனம்.

இயற்கையின் தீபாவளி: விண்வெளி வீரர் மகிழ்ச்சி

விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, விண்வெளியிலிருந்து எடுத்த பூமியின் வீடியோவைத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பகிர்ந்துள்ளார். பூமியின் மேல் மின்னும் மின்னல் ஒளியை இயற்கையின் பட்டாசுகள் என அவர் வர்ணித்துள்ளார். 'தீபாவளி, எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான பண்டிகை. விளக்குகளின் மாயம் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. ஒளியைக் கொண்டாட பிரபஞ்சத்துக்கும் தனி வழி உண்டு என்பதை இந்த வீடியோ நினைவூட்டியது,' என தன், 'இன்ஸ்டாகிராம்' பதிவில் சுக்லா தெரிவித்துள்ளார். சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர்; கடந்த ஆண்டும், விண்வெளியிலிருந்து ஒளிரும் இந்தியாவின் வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
நவ 08, 2026 08:31

பொழுது போக மகிழ்ச்சியாக மாலை 4 மணி முதல் 9 மணிவரை விற்பனை செய்யும் இந்த வடநாட்டு வியாபாரிகளுக்கு போட்டியாக அதிகாலை முதல் இரவு வரை இங்கே நமது மக்கள் கடையை போட்டு அதன் மேல் இருந்த பிரியம் மற்றும் சுவையை கெடுத்து விட்டார்கள்..... 1990 களில் எட்டு பூரி ஒரு ரூபாய், ஒரு பேல் பூரி ஒரு ரூபாய் ஐம்பது காசு..... இன்றும் வட நாட்டு மக்கள் ரோட்டில் நின்று விற்கும் பானி பூரிக்கு தான் பலர் அடிமையாகிவிட்டார்கள்.


bharathi
நவ 08, 2026 05:55

People dont change and look for a hygine food and avoid junk to keep their health well. Lets switch to traditional snacks that suits our body and avoid medication, all these junk resulted to diabetes, PCOS etc


புதிய வீடியோ