உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழைய பாலங்களுக்கு புதிய பிரிவு துவக்கம்; மாநிலம் முழுதும் ஆய்வு செய்ய உத்தரவு

பழைய பாலங்களுக்கு புதிய பிரிவு துவக்கம்; மாநிலம் முழுதும் ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: பழைய பாலங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, நெடுஞ்சாலைத் துறையில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 1.35 லட்சம் தரைப்பாலங்கள், 8,543 சிறு பாலங்கள், 1,047 பெரிய பாலங்கள், 77 சாலை சந்திப்பு மேம்பாலங்கள், 157 ரயில்வே மேம்பாலங்கள், 92 ரயில்வே கீழ்பாலங்கள், 15 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 10 நடை மேம்பாலங்கள் என, 1.45 லட்சம் பாலங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவை, அந்தந்த கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் வாயிலாக பராமரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. பழுதடைந்த பாலங்களை கண்டறிந்து, அவற்றை புனரமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்ததாரர் தேர்வு ஆகியவற்றில் சில நேரங்களில் தாமதம் ஆகிறது. எனவே, பாலங்களை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு, நெடுஞ்சாலை துறையில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு தலைமை பொறியாளரின் கீழ், ஒரு கண்காணிப்பு பொறியாளர், நான்கு கோட்ட பொறியாளர்கள், இதற்கென நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சாலைகள் விரிவாக்கம், புதுப்பித்தல், புதிய பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். பாலங்களை முறையாக பராமரிப்பதற்கும், இந்த பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பிரிவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள பாலங்களை உடனடியாக ஆய்வு செய்யும்படி, துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார். அதன்பின், பாலங்களின் நிலை குறித்து, அவர்கள் அறிக்கை தயாரிக்க வேண்டும். பழுது பார்த்தல் பணி குறித்து, தொடர்புடைய கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர்களுக்கு பரிந்துரை வழங்க வேண்டும். புதிய பாலங்கள் எங்கெங்கு தேவைப்படும் என்பது தொடர்பான அதிகாரிகளின் பரிந்துரைகளையும் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகளின் போன் நம்பர் வேண்டும்

நெடுஞ்சாலைத் துறையில் பழைய பாலங்களை பராமரிக்க புதிய பிரிவு என்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பாலங்களின் நிலை குறித்து, பொதுமக்கள் தகவல் சொல்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்காக, பாலங்கள் பராமரிப்பு பிரிவின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர்களின் மொபைல் போன் எண் அல்லது அலுவலக தொலைபேசி எண், இ - மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு செய்வதால், மலைப் பிரதேசங்களில் உள்ள பாலங்களில், மழைக் காலங்களில் ஏற்படும் மண் சரிவுகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து, உடனடியாக புகார் செய்வதற்கு வசதியாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Selliah Ravichandran
ஜூன் 10, 2025 09:51

Why before government dismiss need to swoka money.no need to anything.. please leave state enough


suren
ஜூன் 10, 2025 08:50

ஒவ்வொரு ரோடுகளில் பழைய பாலங்களிலும் டோலபிரீ நம்பர் போடவேண்டும். அந்த நம்பர் மாநில கட்டுப்படும்யத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும்


சமீபத்திய செய்தி