'தமிழகத்தில் அரசு பெண்கள் பள்ளிகளில், ஆசிரியைகள் மட்டும் நியமிக்கப்பட்டால், தற்போது அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கல்வித்துறை இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்' என, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்திஉள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xbfhao96&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எப்போதும் இல்லாத வகையில், அரசு பள்ளிகளில் மாணவியர் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், விரும்பத்தகாத சம்பவங்கள் குறைந்தபாடில்லை.பள்ளிகளில் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்களால், அர்ப்பணிப்புடன் நேர்மையாக பணியாற்றும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமூக ரீதியாக தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு தீர்வாக, ஏற்கனவே தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியைகள் நியமிக்கப்படுவது போல, அரசு உயர், மேல் நிலைகளில், பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் மட்டும் பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க, அரசு முன்வர வேண்டும். தற்போது அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகள் 9,000க்குள் தான் உள்ளன. இவற்றில் அரசு ஆண்கள் பள்ளி, 200ம், அரசு பெண்கள் பள்ளி, 250 என்ற எண்ணிக்கையில் உள்ளன. மற்றவை இருபாலர் பள்ளிகள். குறைந்தபட்சம் பெண்கள் பள்ளிகளிலாவது முதற்கட்டமாக ஆசிரியைகள் மட்டும் நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: பெண்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதலோ, ஓய்வு பெற்றாலோ அந்த இடத்தில் மாறுதல் கலந்தாய்வின் போது ஆசிரியைகள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் பள்ளியில் ஆசிரியைகள் மட்டும் பணியாற்ற வேண்டும் என்ற முடிவை, அனைத்து தரப்பினரும் வரவேற்கத்தான் செய்வர். அதுபோல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகளும் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பலர் பல விஷயங்களை வெளியே சொல்வதில்லை. பல குற்றச்சாட்டுகளில், தவறு செய்யாத ஆசிரியர்களையும் தண்டிக்கும் சூழல் ஏற்படுகிறது. மாணவர் பள்ளிக்கு ஆசிரியர்களும், பெண்கள் பள்ளிக்கு ஆசிரியைகளையும் நியமிப்பதன் மூலம், இதுபோல் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரும் இந்த முறையை வலியுறுத்துகின்றனர். கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.