அ.தி.மு.க.,வில் நாளுக்கு நாள் பா.ஜ., ஆதரவு நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பா.ஜ., தலைவர்களை வெளிப்படையாக புகழத் துவங்கி உள்ளனர். அவர்களை தடுக்க முடியாமல், பழனிசாமி தவித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8l9338ps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இனிமேல் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்றதற்காக, தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, பா.ஜ.,வினர் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட, கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இவ்வாறு பா.ஜ.,வுக்கு எதிரான நிலைபாட்டில் இருந்த பழனிசாமி, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக, டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து திரும்பினார். 'கூட்டணி வேறு; கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்' என, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். முன்னாள் அமைச்சர் உதயகுமார், 'இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா' என, புகழாரம் சூட்டினார். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி என, பா.ஜ., ஆதரவு நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. தற்போது, அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், பழனிசாமி திணறி வருகிறார்.
இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர்களில் ஒரு சிலர் தவிர பெரும்பாலானோர், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, பலமான கூட்டணி தேவை. அதற்கு பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்த பிறகு, அந்த எண்ணம் வலுப்பட்டு, வெளிப்படையாக பா.ஜ., நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டுகின்றனர். தமிழக பா.ஜ., தலைவராக, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியானதும், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு, வேலுமணி போன்றோர், அவரை சட்டசபை வளாகத்தில் சந்தித்து பேசினர். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், கொடிக் கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்படுவதை தடுக்கும்விதமாக, உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, கொடிக்கம்பத்தை அகற்ற, பேரூராட்சி முயற்சி செய்தது. இதற்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என, கலெக்டரிம் தெரிவித்தார். அதன்பின் கொடிக்கம்பத்தை அகற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்றதற்காக, அவர் மீது அ.தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்த நிலையில், தளவாய்சுந்தரத்தின் தற்போதைய செயல்பாடுகளை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை. அதேபோலவே, பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார் பழனிசாமி. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.