உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் கூட்டணி சேர முன்வந்தால் பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விடுவார்: அடித்து சொல்கிறார் தினகரன்

விஜய் கூட்டணி சேர முன்வந்தால் பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விடுவார்: அடித்து சொல்கிறார் தினகரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''விஜய் கூட்டணிக்கு வந்தால், பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விடுவார்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில், அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பொதுக்கூட்டத்தில், த.வெ.க.,வினர் யாரும் கொடியுடன் வரவில்லை. அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களே, த.வெ.க., கொடியுடன் வந்துள்ளனர். 'த.வெ.க., தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்' என்று, மதுரை மாநாட்டில் விஜய் பேசினார். இப்போது, த.வெ.க.,வை கூட்டணிக்கு, பழனிசாமி அழைக்கிறார். அதாவது, த.வெ.க.,வை தலைமையை ஏற்க, அவர் தயாராகி விட்டார் என்பதையே காட்டுகிறது. 'அ.தி.மு.க., ஆட்சி தொடர உதவி செய்த பா.ஜ.,வுக்கு நன்றியுடன் இருப்பேன்' என, சமீப காலமாக பழனிசாமி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.,வுக்கு மிகமிக முக்கியமான, 2024 லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்காதது ஏன்? பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர். துரோகத்தை தவிர, அவருக்கு வேறு எதுவும் தெரியாது. அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வந்தால், பா.ஜ.,வை கழற்றி விட்டு விடுவார். தான் முதல்வராக கட்சி துவங்கியுள்ள விஜய், பழனிசாமியை ஏற்க மாட்டார். நடக்காது என்று தெரிந்தும், தொண்டர்களை தக்க வைப்பதற்காக, அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க., பலவீனமாக உள்ளது. இதை பா.ஜ.,வும் யோசிக்க வேண்டும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால், அக்கூட்டணிக்கு, 15 சதவீதத்திற்கு கீழ் தான் ஓட்டுகள் கிடைக்கும். பழனிசாமி தன் குடும்ப கட்சியாக, அ.தி.மு.க.,வை மாற்றி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க.,வுக்கு ஆதரவா? ''மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, கரூர் துயரச் சம்பவம் உள்ளிட்ட வழக்குகளில், சி.பி.ஐ., விசாரணையை, தி.மு.க., அரசு எதிர்க்கிறது. எந்த மாநில அரசாக இருந்தாலும் இதைத்தான் செய்யும். இதற்காக, நான் தி.மு.க.,வை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை