| ADDED : அக் 04, 2024 02:36 AM
புதுடில்லி: ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை வரவு வைக்க வேண்டும் என்று, வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும்; இதனால் நிதிச் சுமையும், மனக்கவலையும் ஏற்படுவதாகவும் ஓய்வூதியதாரர்களிடம் இருந்து புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஓய்வூதியம் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு, நிதி அமைச்சகத்தின் சார்பில் அலுவலகக் குறிப்பு கடந்த மாதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்ச் மாதம் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கான ஓய்வூதியமும், அந்தந்த மாதத்தின் கடைசி வேலை நாள் அன்றே, ஓய்வூதியதாரரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு முடித்தல் காரணமாக, மார்ச் மாதத்துக்கான ஓய்வூதியம் மட்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் வேலை நாள் அன்று செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறையை பின்பற்றுவதை உறுதிசெய்யும் வகையில், வங்கிகள் ஓய்வூதியத்தை வரவு வைத்த உடன், அன்றே மின்னணு அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனை கடைப்பிடிக்க தவறினால், சம்பந்தப்பட்ட வங்கிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.