உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காவல் நிலையமா; கசாப்பு கடையா? தகர்த்து எறிவோம்: அழகிரி ஆவேசம்

காவல் நிலையமா; கசாப்பு கடையா? தகர்த்து எறிவோம்: அழகிரி ஆவேசம்

சென்னை: சென்னையில் மக்கள் பிரச்னைகளுக்காக போராடி வந்த, தமிழக காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை அணி நிர்வாகி அப்ரோஸ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதை கண்டித்து, தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:

அப்ரோஸ் மீது போலீசார் தொடுத்த வழக்கு தொடர்பாக, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட பதிவுகளை நீதிபதி பார்த்துவிட்டு, 'இதில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை. சாலை வசதி, ரேஷன் கடை வசதிக்காக போராடி உள்ளார்' என கூறி, ஜாமின் வழங்கியுள்ளார். நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுவிட்டு, அவர் கீழே இறங்குவதற்குள், வேறு இரண்டு வழக்குகளை பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளனர். சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் திரவியம், காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் சென்று, போலீஸ் அதிகாரிகளிடம், இதை எதிர்த்து பேசியுள்ளார். அப்போது, அவர்களை போலீசார் அவமதித்துள்ளனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் என்றால், போலீசுக்கு இளக்காரமாக போய் விட்டது. 'நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எதை செய்தாலும், முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி நியாயப்படுத்தலாம்' என்ற ஆணவ உணர்வு, போலீஸ் துறைக்கு உள்ளது. பல வழக்குகளில் போலீசார் ஏடாகூடமாக மாட்டிக் கொள்கின்றனர். அஜித்குமார் உள்ளிட்ட பலரை, போலீஸ் ஸ்டேஷனில் அடித்து கொலை செய்துள்ளனர். அப்படியென்றால், போலீசார் மீதும் குண்டாஸ் போட்டிருக்க வேண்டாமா? போலீஸ் நிலையம், நீதி வழங்கும் இடம்; ஒரு அப்பாவி நம்பிக்கையோடு செல்கிற இடம். அந்த இடத்தை நம்பி உள்ளே வந்தால், கொலை செய்து அனுப்புவது என்றால், அது என்ன கசாப்பு கடையா; இல்லை போலீஸ் ஸ்டேஷனா? அப்ரோஸ் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி இருப்பது, காங்கிரசாரின் மானப் பிரச்னை. அப்பாவி ஒருவர் மீது கொஞ்சமும் நியாயமின்றி குண்டாஸ் போட்டிருப்பது ஏற்க முடியாதது. ஜனநாயக உணர்வு என்பதே கொஞ்சமும் போலீசாருக்கு இல்லை. போலீஸ் சீருடையில் இருக்கும்போது, சர்வாதிகாரிகளாக நடந்து கொள்வது போலீசாரின் வாடிக்கையாகி இருக்கிறது. உங்களுடைய துப்பாக்கிகள், கைத்தடிகளை, அப்பாவிகளுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்த முயற்சித்தால், அதை தகர்த்து எறிவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை