தமிழக கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த, சொத்துக்களை முடக்கினால் மட்டுமே தீர்வு ஏற்படும்' என, தமிழக அரசுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுக்கு, 200க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் அதிகபட்சம் ஆறு மாதம் வரை சிறையில் இருக்கின்றனர். வெளியே வந்ததும், மற்றொரு இடம் அல்லது அதே இடத்தில் மீண்டும் மருத்துவம் பார்க்கின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அதனால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் அவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. அவர்கள் மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் என்றாலும், மருத்துவ சேவையாற்ற தகுதியற்றவர்கள். அவர்கள் மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல, இந்திய மருத்துவ முறை படித்தவர்கள், அலோபதி மருத்துவம் பார்ப்பதும் தவறு. இது போன்றவர்களும் மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், போலி டாக்டர் என கண்டறிந்து கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசு பரிசீலித்து, அதற்கான சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலிகளை கண்டறிவது எப்படி?
தமிழகத்தில் மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து இருப்பர். அவர்களின் பதிவு எண்ணுடன் தான், மருந்துகள் பரிந்துரை சீட்டு வழங்குவர். மேலும், பெயர் பலகையிலும் பதிவு எண் குறிப்பிடப் பட்டிருக்கும். அந்த பதிவு எண்ணை, https://www.tamilnadumedicalcouncil.org/ என்ற இணையதளத்தில் தேடுவதன் வாயிலாக, டாக்டர் போலி இல்லை என தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை, அந்த பதிவு இணையதளத்தில் பெயர் இல்லையென்றால், அவர் போலி டாக்டர் என சந்தேகித்து, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.