உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது: வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

 போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது: வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

சென்னை: 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 19வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று, சென்னைக்கு வெளியே கிளாம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இறக்கி விட்டனர். 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கடந்த மாதம், 26ம் தேதி முதல், சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த உள்ள இடத்தை முன்னதாக அறிவித்தால், போலீசார் தடுத்து விடுகின்றனர். எனவே, இடத்தை அறிவிக்காமல், திடீரென காலை ஒரு இடத்தை தேர்வு செய்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுக்க முடியாமல் திணறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பின் கைது செய்து மாலை விடுவிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து, அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அழைத்து சென்று அவர்கள் வீட்டில் விட்டனர். அத்துடன் அவர்களை வீட்டு காவலிலும் வைத்தனர். சென்னையில் கைது செய்யப்படுவோருக்கு, மதிய உணவு வழங்காமல் மாலை விடுவித்தனர். நேற்று முன்தினம் முதல் விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றியதுடன், அவர்களுக்கு அறை வழங்கக்கூடாது என, விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் அனைத்து விதமான கெடுபிடிகளை மீறி, நேற்று, 19வது நாளாக, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், குழந்தைகளுடன் அமர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர்களை வெவ்வேறு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். வாகனம் எங்கும் நிற்காமல் சென்றது. எங்கு அழைத்து செல்கிறீர்கள் எனக்கேட்டு போலீசாரிடம், ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையை சுற்றி வந்த போலீசார், மாலை தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு என, வெவ்வேறு பகுதிகளில், ஆசிரியர்களை இறக்கி விட்டனர்.

கைதான ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

எங்களை கைது செய்யும் போலீசார், உணவு, தண்ணீர் தராமல், வாகனங்களில் டீசல் தீரும் வரை, நகரங்களை சுற்றி வருகின்றனர். இயற்கை உபாதைக்கு கூட, வாகனத்தை நிறுத்த மறுக்கின்றனர். தமிழக அரசு போலீசாரை வைத்து, எங்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர் தற்கொலை முயற்சி

பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆறாம் நாளான நேற்று, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் நேரில் வருவதாக தகவல் வெளியானது. உடனே, போராட்டத்தில் ஈடுபட்ட, 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, போலீசார் அவசரமாக கைது செய்தனர். வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த, உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மலேரியா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர், நேற்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் பியூலா ஜான் செல்வராஜ் கூறியதாவது: வீடு, வீடாக சென்று, காய்ச்சல் பாதிப்பை கண்டறிவது, கொசுக்களை ஒழிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பெரும் வெள்ளம், புயல் பாதிப்பு காலங்களில், வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுகிறோம். பல ஆண்டுகளாக மாநகராட்சியில் பணியாற்றி வருவதால், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு போன்றவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உடன்பாட்டால்

ஒத்தி வைப்பு

தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், தங்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி செயலர்கள், நேற்று எட்டாம் நாளாக, சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு முகக்கவசம் அணிந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகளை, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா அழைத்து பேசினார். கோரிக்கையை விரைவில் நிறை வேற்றுவதாக, உறுதி அளித்துள்ளார். அதை ஏற்று, பிப்., 8ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக , சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
ஜன 14, 2026 09:40

மே 2026 திமுக ஆட்சியில் இருக்காது. ஆளும் கட்சிக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்த முடியாமல் எல்லோரையும் வீட்டு வாசலில் வைத்து கைது செய்யவேண்டும்.