சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 24 சதவீதம் ஓட்டு பெற வேண்டும் என்ற இலக்குடன், தேர்தல் களத்தை சந்திக்க, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியூகம் வகுத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, 'என் வழி தனி வழி' என்பதுபோல், தனித்து போட்டி என அறிவித்து, தேர்தல் பணிகளை துவக்கி உள்ளார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 1.03; 2019 லோக்சபா தேர்தலில் 3.87; 2021 சட்டசபை தேர்தலில் 6.5; கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 8.2 சதவீதம் ஓட்டுகளை, நாம் தமிழர் கட்சி பெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில், விஜய் கட்சி தேர்தல் களத்தை சந்திப்பதால், இளைஞர்களின் ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விஜய் கட்சிக்கு மடைமாறும், அதனால் ஓட்டு சதவீதம் குறையும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதை முறியடித்து, தற்போது உள்ள எட்டு சதவீதத்தை மும்மடங்காக உயர்த்தும் வகையில், 24 சதவீதம் ஓட்டுகளைப் பெற, சீமான் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதை எட்டுவதற்காக, பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது: ஏற்கனவே, ஆடு, மாடு களுக்கு மாநாடு நடத்தியது போல, தொடர்ந்து பல மாநாடுகளை நடத்தி வரும் சீமான், மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். மேலும், தொகுதி வாரியாக, ஊழல் செய்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை எடுத்துள்ளார். அவர்கள் செய்த ஊழல் தொடர்பாக ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. அதை தனது பிரசாரத்தின்போது ஒளிபரப்ப செய்து, நா.த.க., ஆட்சிக்கு வந்தால், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய, என்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்பதை பட்டியலிட்டு, மக்களை கவர முடிவு செய்துள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கான உத்திகளை வகுத்து வருகின்றனர். வித்தியாசமான, நவீன தொழில்நுட்ப பிரசாரம் வாயிலாக, 24 சதவீத ஓட்டுகளைப் பெறும் இலக்கை அடைய முடியும் என, சீமான் நம்புகிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.