உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு மும்பை திரும்பிய ஷிண்டே திட்டவட்டம்

பா.ஜ., தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு மும்பை திரும்பிய ஷிண்டே திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மஹாயுதி கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்றும், புதிய முதல்வராக பா.ஜ., தலைமை யாரை தேர்வு செய்தாலும், அதற்கு என் முழு ஆதரவு உண்டு என்றும், காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று தெரிவித்தார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதில், மஹாயுதிகூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஆளும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முடிவடைந்து, அக்கட்சிகளின் சட்டசபை தலைவர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. இன்று கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், காபந்து முதல்வர்ஏக்நாத் ஷிண்டே, சதாராமாவட்டத்தில் உள்ள தன் சொந்த கிராமத்துக்கு கடந்த 29ல் சென்றார்.அரசு அமைப்பதில் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அவர் அதிருப்தி அடைந்ததால், சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்பட்டது.இந்நிலையில், நேற்று மும்பை திரும்பிய ஏக்நாத் ஷிண்டே, இந்த அனுமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அடுத்த முதல்வர் யார் என்பதை பா.ஜ., தலைமை தேர்ந்தெடுக்கும். அதற்கு நானும், என் கட்சியினரும் முழு ஆதரவு அளிப்போம் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை. சற்று ஓய்வெடுக்கத் தான் சொந்த கிராமத்துக்கு வந்தேன். இது வழக்கமான நடைமுறை தான். வந்த இடத்தில் காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தற்போது நலமாக உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.அவரது மகனும், லோக்சபா உறுப்பினருமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கேட்பதாகவும், உள்துறை சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த ஷிண்டே, ''பேச்சு நடந்து கொண்டிருக்கிறது,'' என தெரிவித்தார்.'மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிச., 5ல் முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும். இதில் பிரதமர் மோடி பங்கேற்பார்' என, பா.ஜ., மாநில தலைமை அறிவித்துள்ளது.தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்.,கில் இருந்து தலா ஒருவர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்படுவர் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KRISHNAN R
டிச 02, 2024 21:56

இவர் மனம் வந்து சொல்வது போல் இல்லை


SP
டிச 02, 2024 10:16

இவரை முதல்வராக்கியது பாஜக தான்.அதனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு தரவேண்டும்.


S Regunathan Abudhabi UAE
டிச 02, 2024 08:46

சூப்பர். ஷிண்டே தன் மகனுக்கு து.மு பதவியை கொடுத்துவிட்டு, டெல்லி சென்று மத்திய கேபினட் அமைச்சர் ஆவார் என தோன்றுகிறது. மொத்தததில் பிஜேபிக்கு ஒரு கல்லில் 3 மாங்காய் / புள்ளி கூட்டணி நிர்மூலமானது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை