மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
மதுரை : 'த.வெ.க.,- அ.தி.மு.க., கட்சிகளில் செல்வாக்குள்ள, தேர்தல் பணியாற்றக்கூடிய நிர்வாகிகள் யாரும் இருந்தால் அவர்களை நம் கட்சிக்கு அழைத்து வாருங்கள்' என 'ஒன் டூ ஒன்' சந்திப்பில் தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் 'அசைன்மெண்ட்' கொடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ளன. மதுரையில் ஜூனில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் உறுதியளித்தபடி தற்போது தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து 'ஒன் டூ ஒன்' சந்திப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சிவகாசி, மதுரை தெற்கு தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார். தொகுதி நிலவரம், ஓட்டுக்கள் எண்ணிக்கை, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு, எதிர்கட்சிகளில் பலம், அரசு நலத்திட்டங்கள் குறித்து மக்கள் மனநிலை என கேள்விகளை கேட்டு பதில் பெறுகிறார். அப்போது 'உங்க தொகுதியில் த.வெ.க., அ.தி.மு.க.,வில் செல்வாக்காக யாரும் இருக்காங்களா. இருந்தா நம்ம கட்சிக்கு வேலை செய்ய எங்கிட்ட அழைச்சுட்டு வாங்க' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க.,வினர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் தி.மு.க.,, அதன் கூட்டணி கட்சிகள் இறங்கியுள்ளன. இத்தேர்தலில் கருணாநிதி, ஸ்டாலின் என்ற தலைவர் முகங்கள், ஆளுங்கட்சியின் 5 ஆண்டு செயல்பாடு, நலத் திட்டங்களை தாண்டி, 'கூட்டணி பலம்' என்பதையே தி.மு.க., பெரிதும் நம்பி இறங்கியுள்ளது. அதேநேரம் எதிர் கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., தவிர வேறு குறிப்பிடும் வகையிலான எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததும் தி.மு.க.,விற்கு சாதகமானது. ஆனால், விஜயின் த.வெ.க., கட்சி வரவும், அவருக்கு கூடும் இளைஞர்கள் கூட்டமும் ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது. இதனால் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., வி.சி., கட்சிகளுக்கு 'கூட்டணி தடுமாற்றம்' ஏற்பட்டுள்ளது. மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் த.வெ.க.,வை பா.ஜ., வலைக்குள் கொண்டுவரும் அரசியலும் நடப்பதால் அ.தி.மு.க.,- பா.ஜ.,- த.வெ.க., கூட்டணி ஏற்பட்டால் தி.மு.க.,வுக்கு சிக்கல் ஏற்படும். இதை மனதில் வைத்து தான் தொகுதிகளில் செல்வாக்குள்ள த.வெ.க., அ.தி.மு.க.,, கட்சி நிர்வாகிகளை கடைசி நேரத்தில் எப்படியாவது தி.மு.க.,வுக்குள் இழுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் இதுபோன்ற 'அசைன்மெண்ட்டை' ஸ்டாலின் வழங்கியுள்ளார். நிச்சயம் அதுபோன்ற நிர்வாகிகளை துாக்குவோம் என்றனர்.
30-Sep-2025