சென்னை: சார் - பதிவாளர், தாசில்தார் போன்று, அரசு அலுவலக, 'சிசிடிவி' பதிவுகளை வெளியாட்கள் பெற முடியாது என, தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாளர்கள், அதிகாரிகள் முறையாக செயல்படுகின்றனரா என்பதை, கண்காணிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதே நேரம், வெளியாட்கள் நுழைந்து, ஏதாவது பிரச்னை செய்வதையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. மக்கள் கேட்புஇதற்காக, சார் - பதிவாளர், தாசில்தார், கோட்டாட்சியர் போன்ற அலுவலக வளாகங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், பதிவாகும் காட்சிகளை, மேலதிகாரிகள் கண்காணிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, அரசு அலுவலகங்களில் நடக்கும் பணி விபரங்களை, பொது மக்கள் பெற வழி செய்யப்பட்டு உள்ளது.இதில், பொதுமக்கள் தொடர்பான கோப்புகள், உத்தரவுகள் குறித்த எழுத்துப்பூர்வ தகவல்களை பெற முடியும். ஆனால், சிலர் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் நடந்த, சில நிகழ்வுகள் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு மனு செய்கின்றனர். இந்த சட்டத்தின்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொடுப்பதா என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்ட ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், குறிப்பிட்ட சில மணி நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டு, ஜி.ஆனந்தபாபு என்பவர் மனு செய்தார். அதற்கு பொது தகவல் அலுவலர் பதில் அளிக்கவில்லை.பெற முடியாதுஇது தொடர்பான இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் ரா.பிரியகுமார் பிறப்பித்துள்ள உத்தரவு: வருவாய் கோட்டாட்சியரான ஆர்.டி.ஓ., அலுவலக பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறக்கூடிய ஆவணமாக கருத முடியாது. அதன்படி, சிசிடிவி பதிவுகளை வழங்கினால், அது, பொது மக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுத்தும். காவல் துறை விசாரணை அல்லது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மட்டுமே, இப்பதிவுகளை வெளியாட்களுக்கு வழங்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதை வழங்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருமா மாற்றம்?
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு தொடர்பான காட்சி பதிவுகள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, 'டிவிடி' ஆக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் பிரதிகளை, தகவல் அறியும் உரிமை சட்டப்படி தனிநபர்களும் கேட்கின்றனர். தகவல் ஆணைய உத்தரவு அடிப்படையில், இதில் முடிவு எடுக்க, பதிவுத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.