உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தன் வேலையை மாணவர்கள் தலையில் சுமத்தும் யு.ஜி.சி.,

தன் வேலையை மாணவர்கள் தலையில் சுமத்தும் யு.ஜி.சி.,

சென்னை: 'மாணவர்கள் உயர் கல்வி சேர்வதற்கு முன்பாக, அந்த கல்வி நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.உத்தர பிரதேச மாநிலம், எடா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், மருத்துவக் கல்லுாரி ஒன்று இயங்கி வந்தது. இங்கு, பி.பார்ம்., - டி.பார்ம்., - பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தன. போதிய அங்கீகாரம் இல்லாமல், இந்த போலி மருத்துவக் கல்லுாரி இயங்கி வந்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தாமல், மாணவர்கள் சேர வேண்டாம் என, யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தியது.

இதையடுத்து, யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:

நாடு முழுதும் மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் ஆகியோர், ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு முன், அந்த கல்வி நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். அந்த கல்வி நிறுவனம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை ஆராய வேண்டும். மேலும், பல்கலை மானியக் குழு சட்டம் மற்றும் இன்னும் பிற சட்டத்தின் கீழ், அந்த கல்வி நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க அனுமதி பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.கல்வி நிறுவனம், தொலைதுார படிப்பு, 'ஆன்லைன்' படிப்பு ஆகியவற்றுக்கு முறையான அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்து சரிபார்க்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் வெளியிடும் அங்கீகார இணைப்பு, அனுமதிகள் அல்லது பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் குறித்த விளம்பரங்கள், சமூக வலைதளங்கள், பிரசுரங்கள், சமூக ஊடகப் பதிவுகள் அல்லது கூற்றுகளை மட்டுமே முழுமையாக நம்ப வேண்டாம்.யு.ஜி.சி.யின், www.ugc.gov.in என்ற இணையதளத்தில், கல்வி நிறுவனங்களின் அங்கீகாரங்களை சரிபார்க்க வேண்டும். பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் விபரங்களையும், போலி கல்வி நிறுவனங்களின் விபரங்களையும், www.ugc.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிருப்தி

நாட்டில் பல லட்சம் பேர், இப்போதும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் வருகின்றனர். பலர், போதிய விழிப்புணர்வு இல்லாததால், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் சிக்கிக் கொள்கின்றனர். அங்கீகரிக்கப் படாத, போலி கல்வி நிறுவனங்களை செயல்படாமல் தடுக்க வேண்டிய, யு.ஜி.சி., வெறும் எச்சரிக்கை மட்டும் விடுப்பது ஏற்புடையதல்ல. போலி கல்வி நிறுவனங்கள் செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் செய்ய வேண்டிய வேலையை, மாணவர்கள் மீது யு.ஜி.சி., சுமத்துகிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை