உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜராஜன் கர்நாடகாவை ஆட்சி செய்வதற்கு முன்பே தமிழ் எழுத்துக்கள் அங்கு சென்று விட்டன: தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தகவல்

ராஜராஜன் கர்நாடகாவை ஆட்சி செய்வதற்கு முன்பே தமிழ் எழுத்துக்கள் அங்கு சென்று விட்டன: தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தகவல்

சென்னை: ''ராஜராஜ சோழன் கர்நாடகாவை ஆட்சி செய்வதற்கு முன்னரே, தமிழ் எழுத்துகள் அங்கு சென்று விட்டன,'' என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தார். உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், 'அறிஞர்கள் அவையம்' தொடர் நிகழ்ச்சியாக, 'சுவடியியல் - கல்வெட்டியல் - பதிப்பியல்' என்ற தலைப்பில், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று சொற்பொழிவு நடந்தது. வில்லுப்பாட்டு இதில், உலக தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் தசரதன் பேசுகையில், ''தமிழகத்தில், கதைப்பாடல் மரபு, 16ம் நுாற்றாண்டில் துவங்கியது. இதில், கனியான் கூத்து, தெருக்கூத்து, உடுக்கடிப் பாட்டு, வில்லுப்பாட்டு எனும் வகைகள் பிரபலமாக இருந்தன. இவற்றில், ஆரவல்லி சூரவல்லி, நலன், நல்லதங்காள், அரிச்சந்திரன் உள்ளிட்ட கதைகள் சொல்லப்பட்டன. அவற்றை, பாமரர்களே, பாமரர்களுக்காக, எளிமையாகவும் ரசிக்கும்படியும் வழங்கினர். அவை பின், ஓலைச்சுவடிகளில் பதிவாகி உள்ளன,'' என்றார். தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகர் மணிமாறன் பேசுகையில், 'தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தில், பாண்டியர், சோழர், மராட்டியர் காலத்தை சேர்ந்த இலக்கியங்கள், ஓலைச்சுவடிகளாக உள்ளன. அவற்றில், 3,500 தலைப்புகளில், சித்த மருத்துவ சுவடிகள் உள்ளன,'' என்றார். சென்னை உ.வே.சா., நுால் நிலைய புலவர் உத்திராடம் பேசுகையில், ''உ.வே.சாமிநாதய்யர் பெரும்பாலான மடங்களில் இருந்து சுவடிகளை சேகரித்ததால், பக்தி இலக்கிய சுவடிகள் அதிகளவில் உள்ளன. தஞ்சையில் இருந்து கிடைத்தவற்றில், சரபோஜி மன்னர் சேகரித்த அதிகளவிலான சமஸ்கிருத சுவடிகளும் உள்ளன,'' என்றார். கல்வெட்டு தொல்லியல் அறிஞர் வசந்தி பேசுகையில், ''தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அடி ஆழத்தில் கிடைக்கும் கருப்பு - சிவப்பு பானை ஓடுகளில் தான், பழமையான தமிழி எழுத்துகள் கிடைக்கின்றன. அவற்றில், 'வேந்தன், சாத்தன், அந்துவன், ஆதன்' உள்ளிட்ட பெயர்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை பற்றிய ஒப்பு நோக்கில் ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது,'' என்றார். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பேசுகையில், ''பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில், 300 தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில், 100 கல்வெட்டுகளை ஆய்வு செய்தேன். ''அவற்றில், அதிகளவில் ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்களின் ஆட்சி நிர்வாகம், கொடை, மெய்க்கீர்த்தி தொடர்பான செய்திகள் உள்ளன. ''ஆனாலும், 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திப்பட்டான் நடுகல்லும் உள்ளது. இதிலிருந்து, ராஜராஜ சோழன் ஆட்சி செய்வதற்கு முன்னரே, கர்நாடகாவுக்கு தமிழ் எழுத்துகள் சென்றுவிட்ட தை அறிய முடிகிறது,'' என்றார். தொல்லியல் அறிஞர் ராஜவேலு பேசுகையில் , ''கொற்கையில் கிடைத்த தமிழி எழுத்து, பொ.ஆ.மு., 780 என காலக்கணிப்பு செய்யப்பட்டது. அந்த கருத்தை, அப்போதைய தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி, பின்னர் வாபஸ் பெற்றார். ''இதுவரை கிடைத்த தமிழி எழுத்துகளில் அதுவே மூத்தது. அடுத்து, அதற்கு நிகரான எழுத்துகளாக பெரும்பாலை, பொருந்தல், கொடுமணல், சிவகளை, கீழடி ஆகிய இடங்களில் எழுத்துகள் கிடைத்துள்ளன,'' என்றார். சுவடியியல் நிகழ்ச்சியில், தொல்லியல் அறிஞர்கள் கி.ஸ்ரீதரன், கிருஷ்ணமூர்த்தி, பூங்குன்றம், உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின், சுவடியியல் துறை உதவி பேராசிரியர் தாமரைப்பாண்டியன், புதுச்சேரி பிரெஞ்சு கல்வி நிறுவன பே ராசிரியர் ராஜரத்தினம், மாநில சுவடி குழும ஒருங்கிணைப்பாளர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kulanthai kannan
பிப் 12, 2026 20:20

மொழி வெறியர்களை வேறெங்கும் பார்க்க முடியாது


Savitha
பிப் 12, 2026 09:01

தமிழ், தெலுங்கு, கன்னடம் அப்டின்னு நாம தான் பிரிச்சு பார்த்து, பேசிட்டு இருக்கோமோன்னு தோணுது, ராஜா ராஜா சோழனின் அப்பா சுந்தர சோழன் பாதி தெலுங்கு, பாதி தமிழ், சுந்தர சோழனின் அம்மா, வைதும்பா சாளுக்கியர் (கல்யாணி சாளுக்கியர்) எனப்படும் கிழக்கு சாளுக்கிய அரச வம்சத்தை சேர்ந்தவர், அதாவது தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர், சுந்தர சோழனின் தந்தை அரிஞ்சய சோழனின் தாயார் சேர நாட்டை சேர்ந்த இளவரசி, அதன் படி அரிஞ்சய சோழன் பாதி மலையாள தேசம், பாதி சோழ தேசம் என்று அறியலாம், அதனால் இந்த மொழி வேறுபாடு இன்றி, சோழர்கள் எல்லோரையும் அரவணைத்து ஆட்சி செய்த பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை அறிய முடிகிறது, குறுகிய வட்டத்திற்குள் சிக்கி கொண்டு, இன்றைய மக்களாகிய நாம் தான் இப்படி சின்ன வட்டத்திற்குள்ளேயே இருக்கிறோம் என்று தோன்றுகிறது.