: தெலுங்கானாவில், ஆளும் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் துாக்கத்தை கெடுத்துள்ளது. கடுப்பான அவர், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களை கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அதிருப்தி இந்த சர்ச்சைக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் வனம், சுற்றுச்சூழல் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் கொண்டா சுரேகா. வாரங்கல் மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வழக்கமாக, கோப்புகளை முடிக்க அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவர். அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு பதில், அந்த பணத்தை சமூக மேம்பாட்டுக்கு தொழிலதிபர்கள் பயன்படுத்த வேண்டும்' என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'காங்., அரசில் ஊழல் நிறைந்துள்ளது என்பதை அமைச்சர் சுரேகாவே ஒப்புக் கொண்டுள்ளார்' என, பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளே, மற்றொரு சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் கொண்டா சுரேகா. 'நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா விவாகரத்துக்கு பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் தான் பொறுப்பேற்க வேண்டும்' என, அவர் பேசினார். இ தனால் அதிருப்தி அடைந்த நடிகர் நாக சைதன்யாவின் தந்தையான பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, அமைச்சர் கொண்டா சுரேகாவின் மகள் சுஷ்மிதா, முதல்வர் ரேவந்த் ரெட்டி, அவரது சகோதரர்கள் கொண்டல் ரெட்டி, திருப்பதி ரெட்டி ஆகியோர் மீது நில ஆக்கிரமிப்பு, பணம் பறித்தல் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். குற்றச்சாட்டு வாரங்கல் மாவட்டத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பில் அறநிலையத் துறை வெளியிட்ட டெண்டரை, அமைச்சர் கொண்டா சுரேகாவின் நெருங்கிய உறவினர் எடுப்பதாக இருந்தது. இ தையறிந்த வாரங்கல் பொறுப்பு அமைச்சரான வருவாய் துறை அமைச்சர் பி.சீனிவாஸ் ரெட்டி, அமைச்சர் கொண்டா சுரேகாவின் உறவினருக்கு டெண்டர் கிடைக்கக் கூடாது என்பதற்காக, அந்த டெண்டரையே ரத்து செய்தார். முதல் வர் ரேவந்த் ரெட்டி, அவரது சகோதரர்கள் மீது சுஷ்மிதா குற்றச்சாட்டுகளை சுமத்த இதுவே காரணம். அடுத்த சர்ச்சையில் சிக்கியவர், போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.சி., மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.லட்சுமண குமாரை, 'எருமை மாடு' என அழைத்தார். இதனால் கோபம்அடை ந்த எஸ்.சி., தலைவர்கள், அமைச்சர் பொன்னம் பிரபாகருக்கு எதிராக கொந்தளித்தனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த காங்., மேலிடம், பொன்னம் பிரபாகர் - ஏ. லட்சுமண கு மார் இடையே சமரசம் செய்தது. எச்சரிக்கை இதையடுத்து, மதுவிலக்கு அமைச்சர் ஜுபல்லி கிருஷ்ணா ராவ் - மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், வருவாய் துறை முதன்மை செயலருமான சையத் அலி முர்தசா அலி ரிஸ்வி இடையே மோதல் வெடித்தது. கோ ப்புகளை சையத் அலி தடுப்பதாக அமைச்சர் ஜுபல்லி கிருஷ்ணா ராவ் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார். அதிருப்தி அடைந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சையத் அலி, ஓய்வு பெற, 10 ஆண்டுகள் உள்ள நிலையில், திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். அமைச்சர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, சமீபத்தில் அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களை கடிந்து கொண்ட அவர், அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு, 'கன்டென்ட்' கொடுக்க வேண்டாம் என்றும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கறாராக கூறினார். அமைச்சர்களின் இத்தகைய நடத்தை தனிப்பட்ட முறையில் தன்னை பலவீனப்படுத்துவதாகக் குறிப்பிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி, பொதுமக்களிடையே காங்., அரசின் நற்பெயரை சீர்குலைப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இனி, சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உத்தரவுக்கு அமைச்சர்கள் கட்டுப்படுவரா அல்லது மீண்டும் சர்ச்சையில் சிக்குவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். - நமது சிறப்பு நிருபர் -