ரம்மியமான கடற்கரை நகரமான கோவாவில், வெளிமாநில தொழிலாளர்கள் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையை போல பார்க்கப்படுகிறது. எனவே தான், கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு கோவாவின் சங்கோல்டா என்ற இடத்தில், கர்நாடக தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட போது, மாநிலத்தில் அது எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.அந்த அளவுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கோவா மக்களுக்கு வெறுப்பு ஏற்பட காரணம் என்ன? எல்லாம் அரசியல் தான்.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவா மக்கள் தொகையில் 18.5 சதவீதம் அதாவது, 15 லட்சம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இவர்கள் கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தனர்.இன்றோ, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் என, கோவாவுக்குள் தஞ்சம் அடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் கோவாவுக்குள் ஹிந்தி பேசுவதை கேட்பதே அரிதாக இருந்தது. இன்று, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான கொங்கனி பேசுபவர்களை காண்பதே அரிதாகி விட்டதாக கூறப்படுறது.அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டு வங்கி லாபத்துக்காக, வெளிமாநில தொழிலாளர்களின் வரவை முறைப்படுத்த தவறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து, வடக்கு கோவா லோக்சபா தொகுதியில் போட்டியிடும், புரட்சிகர கோவா கட்சி வேட்பாளர் மனோஜ் பராப் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 2,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் சட்டவிரோத ஓட்டுகள் அதிகரிக்கின்றன. வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். நாங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் சட்டவிரோத செயல்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிலையை சமாளித்து, உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மறைந்த மனோகர் பரிக்கர், கோவாவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது. கடந்த 2022ல், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தரும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு மேல் கோவாவில் வசிப்பவர் மண்ணின் மைந்தராக கருதப்படுவர். இரண்டு ஆண்டுகளில் அந்த மசோதாவும் திரும்ப பெறப்பட்டது.- நமது சிறப்பு நிருபர் -