உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 35 லட்சம் திருமணங்களுக்கு ரூ.4.25 லட்சம் கோடி செலவு களைகட்ட போகும் திருமண சந்தை

35 லட்சம் திருமணங்களுக்கு ரூ.4.25 லட்சம் கோடி செலவு களைகட்ட போகும் திருமண சந்தை

புதுடில்லி, செப். 20-'இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 35 லட்சம் திருமணங்களுக்கு, 4.25 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்படும்' என மதிப்பிடப்பட்டுள்ளது.சந்தை ஆய்வு நிறுவனமான பிரபுதாஸ் லீலாதர், 'மேளம், வாத்தியம், ஊர்வலம் மற்றும் சந்தைகள்' என்ற பெயரில், இந்திய திருமண சந்தை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில், கிட்டத்தட்ட 35 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மேளதாளம், வாத்தியம், ஊர்வலம், விருந்து உள்ளிட்டவற்றுக்கு, ஒட்டுமொத்தமாக 4.25 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்படும் என தெரிகிறது.கடந்தாண்டு, இதே காலத்தில், 32 லட்சம் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நடப்பாண்டு ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரையிலான காலத்தில், 42 லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு, 5.50 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால், இந்தாண்டு தங்கத்தை அதிகளவில் வாங்கி குவிக்கக்கூடும். ஆடைகள், காலணிகள், தங்குமிடம், விருந்தோம்பல், வாகனங்கள் போன்றவற்றிலும் திருமணம் சார்ந்த செலவழிப்பு அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, ஒரு கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்கு, கிட்டத்தட்ட 10.80 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால், திருமணம் சார்ந்த துறை, இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய துறையாக உருவெடுத்து உள்ளது. இது தவிர, சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சர்வதேச திருமணக் கொண்டாட்டங்களை இந்தியாவில் நடத்த ஊக்குவிப்பதால், 1 லட்சம் கோடி ரூபாய் வருவாயாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை