உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சியினரை திருமா கட்டுப்படுத்தி இருக்கணும்: உயர் நீதிமன்றம்

கட்சியினரை திருமா கட்டுப்படுத்தி இருக்கணும்: உயர் நீதிமன்றம்

சென்னை: 'வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்த தலைவர், அவரது கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நுழைவு வாயில் வெளியே, கடந்த 7ம் தேதி, வழக்கறிஞரின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி., தலைவர் திருமாவளவன் கார் மோதியது. வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி., வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தாக்கி காயப்படுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தபோதும், வழக்கறிஞர்கள் சிலர், அவரை சரமாரியாக தாக்கினர். இவ்விவகாரத்தில், தமிழக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார் கவுன்சில் இணை தலைவரான, வழக்கறிஞர் கே.பாலு, பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், கடலுாரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கே.பாலுவுக்கு எதிராக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாலு அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர், பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய பின், சமூக வலைதளங்கள் என, பல்வேறு இடங்களில் இருந்து, தொடர் மிரட்டல் வருகிறது. மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதோடு, அவதுாறாக பேசியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்றார். காவல்துறை தரப்பில், 'வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'வழக்கறிஞரை, குழுவாக சேர்ந்து தாக்கி உள்ளனர். ஆனால், எதன் அடிப்படையில், இரு தரப்பு அளித்த புகாரில், இரண்டு பேர் மீது மட்டுமே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் தாக்கப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், என்ன செய்து கொண்டிருந்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் அமைதியாக இருந்ததாகவே, நீதிமன்றம் கருதுகிறது. 'சம்பவ இடத்தில் இருந்த தலைவர், கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டாமா?' என, நீதிபதி கருத்து தெரிவித்தார். அதற்கு காவல்துறை தரப்பில், 'வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு, போலீசார் அழைத்து சென்றனர்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'சம்பவம் நடந்த இடத்தில் பதிவான, 'சிசிடிவி' பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !