சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், தொலை நோக்கு போக்குவரத்து மேலாண்மை திட்டம் இல்லாததால், சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதி நேரத்தை வாகன நெரிசலில் வீணாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேருபூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம்.தற்போது, ஊட்டி சீசன் துவங்கிய நிலையில், நாள்தோறும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும், ஊட்டி, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குன்னுார் முக்கிய நகர பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாதாகி விட்டது. அதில், ஊட்டியில், கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, மத்திய பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி- -குன்னூர் சாலையில் காலை, மாலை, இரவு நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பது வாடிக்கையானது. இதனால் சுற்றுலா பயணிகள் பிற சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இதனால், இவர்களின் பயண திட்டம் பாதிக்கப்படுகிறது. இதற்கு நீலகிரி மாவட்டத்துக்கான, தொலை நோக்கு போக்குவரத்து மேலாண்மை திட்டம் இல்லாதது முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
குன்னுார்
குன்னுாரில் முக்கியத்துவம் வாய்ந்த மவுன்ட் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைபாதை அகற்றியதால், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. சுற்றுலா டாக்சிகளுக்கு, தனியாக வேறு இடங்களில், ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைக்கவும் தன்னார்வ அமைப்புகள் கலெக்டரிடம் பல முறை மனு அளித்தனர்.தொடர்ந்து, வருவாய்த்துறை, சர்வே, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய, தனி குழு ஏற்படுத்தி தீர்வு காண, கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள், போலீசார், ஒருங்கிணைப்பு இல்லாததால் தீர்வு காணப்படவில்லை. கூடலுார்
தமிழகம், கர்நாடகா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கூடலுார் பகுதி உள்ளது. இதனால், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். நகரில், பார்க்கிங் வசதி இன்றி ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதில், தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி; தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனைச்சாவடி வழியாக வெளி மாநில வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. அப்பகுதிகளில், வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பரிசோதனை, இ--பாஸ் சோதனை பணிகள் நடப்பதால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டி உள்ளது. பந்தலுார்
மாநில எல்லையில் பந்தலுார் பகுதி உள்ளதால், மூன்று மாநில சுற்றுலா வாகனங்கள்; அரசு பஸ்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இப்பகுதியில் குறுகலான சாலைகள் அதிகளவில் உள்ளதால், கோடை சீசன் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கேரளா அல்லது கோவை மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்லும்போது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் தொடர்கிறது. இதை தவிர, பந்தலுார் பஜார் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், விதிமீறிய பார்க்கிங் தளங்களாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
சிலைகளை மாற்ற வேண்டும்
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''மவுன்ட் ரோட்டில், சாலையில் நிறுத்தும் சுற்றுலா வாகனங்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி இங்கு நடைபாதை அமைக்க வேண்டும். மவுன்ட் ரோட்டின் துவக்கத்தில் உள்ள சிலைகளை போக்குவரத்து இடையூறு இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும். சிம்ஸ்பார்க் வரையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை எந்தவித பாரபட்சமின்றி அகற்றி, மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்க வேண்டும்,'' என்றார்.
கிங் செய்ய போதிய வசதிகள் இல்லை. இதனால், பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலைகளை அகலப்படுத்தி, பார்க்கிங் வசதிகள் செய்து தரவேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும்,'' என்றார்.
பந்தலுார் டிராவல்ஸ் உரிமையாளர் அனுாப் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பயணிகள், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சென்று இயற்கை காட்சிகளை ரசிக்க வழியில்லை. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இங்கு செய்யப்படவில்லை. இதனால், சிறு குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள், சாலையில் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது,'' என்றார்.கூடலுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் யாசின் கூறுகையில், ''மூன்று மாநிலங்களையும் இணைக்கும் கூடலுார் நகரின், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண நகர சாலையை அகலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, ஆங்கிலேயர் காலத்து வரைபடத்தை பயன்படுத்தி சாலையை சர்வே செய்து, விரிவுபடுத்த வேண்டும். நகரில் பார்க்கிங் வசதி இல்லாததால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நவீன பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
கிடப்பில் மேம்பால திட்டம்...
குன்னுாரில் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சாலையில் சீசன் காலங்களில், சுராஜ் மஸ்தா உட்பட பெரிய வேன்கள் ஒரே நேரத்தில் செல்வதால், சிறிய ரோட்டில் நெரிசலில் சிக்கி, பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குன்னுார் லெவல் கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், ரயில் கடந்து செல்லும் நேரங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.
கூடுதல் கவனம் செலுத்தப்படும்...
ஊட்டி டவுன் டி.எஸ்.பி., நவீன்குமார் கூறுகையில், ''ஊட்டிக்கு தற்போது நாள்தோறும் சராசரியாக, 2000 முதல் 2500 வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரிக்கிறது. இங்குள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகள் போலீசார் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர, நகராட்சி சார்பில் ஆங்காங்கே கார் பார்க்கிங்வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீசனை ஒட்டி இ--பாஸ் திட்டம் ஜூன், 30ம் தேதி வரை நடை முறையில் இருப்பதால் வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும். நகரப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்,'' என்றார். -நிருபர் குழு--