உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தல் கமிஷனுக்கு மிரட்டல் விடும் திரிணமுல் கட்சியினர்

தேர்தல் கமிஷனுக்கு மிரட்டல் விடும் திரிணமுல் கட்சியினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: ''மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியோடு சேர்த்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அமல்படுத்த முயற்சித்தால், பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷனின் கால்களை உடைத்து விடுவேன்,'' என கொல்கட்டா நகர மேயரும், திரிணமுல் காங்., அமைச்சருமான பிர்ஹத் ஹக்கீம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். பீஹாரை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட, 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் நவ., 4 முதல் டிச., 4 வரை வீடு வீடாக சென்று விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், திரிணமுல் காங்., ஆளும் மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்காக, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் கமிஷன் நேற்று ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் அடையாள நடைமுறைகள் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆளும் திரிணமுல் காங்., சார்பில் பங்கேற்ற அமைச்சர் பிர்ஹத் ஹக்கீம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு வலுவாக ஆட்சேபம் தெரிவித்தார். உண்மையான வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சி இது என்றும் விமர்சித்தார். இதனால், தேர்தல் கமிஷன் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இது குறித்து ஹக்கீம் கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் பெயரை நீக்கினாலும், சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடுமையாக எதிர்ப்போம் என திரிணமுல் காங்., சார்பில் தேர்தல் கமிஷனிடம் வலுவாக எடுத்துரைத்துள்ளோம். அதேபோல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியுடன் சேர்த்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அமல்படுத்த முயற்சித்தால், பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷனின் கால்களை உடைத்து விடுவேன். மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சியில் இருக்கும் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் பா.ஜ.,வால் அமல்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில், பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் முயல்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekar Jayaraman
அக் 30, 2025 13:26

இந்த மலைகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து கவர்னர் ஆட்சி அமைத்து வாக்காளர் திருத்தபணி நடைபெற வேண்டும்.


S Srinivasan
அக் 30, 2025 13:07

first foremost dismiss this govt, mr modi immediately take action it high time ti avoid another earlier kasmir in east side of india


ஈசன்
அக் 30, 2025 08:36

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக வெளிநாடுகளில் செயல்படும் நபர்கள், மர்ம நபர்களால் போட்டு தள்ளப்படுகிறார்கள். மர்ம நபர்களே கொஞ்சம் உள்நாட்டுக்கும் வாருங்களேன், பிளீஸ்...


சமீபத்திய செய்தி