உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில்?: பா.ஜ.,வுக்கும் புதிய தலைவர்

மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில்?: பா.ஜ.,வுக்கும் புதிய தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், இம்மாத இறுதியில் பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.கடந்த 2024 ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்; மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. லோக்சபா தேர்தலையொட்டி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

ஒரு நபர்; ஒரு பதவி

பா.ஜ., கட்சி விதிகளின்படி, 'ஒரு நபர்; ஒரு பதவி' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதால், புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே, மாநிலங்கள் அளவில் கட்சி தலைவர்கள் மாற்றம் நடந்து வருகிறது.சமீபத்தில் தமிழக பா.ஜ., தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் போட்டியின்றி ஒருமனதாக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். 'மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இம்மாத இறுதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என, கூறப்படுகிறது. இந்த போட்டியில், மத்திய அமைச்சர்கள் மனோகர் லால் கட்டார், தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ் ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடம் பா.ஜ., மேலிடம் விரைவில் கருத்து கேட்க உள்ளது. அதைத் தொடர்ந்து, பா.ஜ., தேசிய தலைவரை தேர்வு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

கடும் போட்டி

வழக்கமாக, அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவுடன், பா.ஜ., தேசிய தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த பதவிக்கு மத்திய அமைச்சர்களிடையே கடும் போட்டி நிலவுவதால், அவர்களில் ஒருவர் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், அது அமைச்சரவை மாற்றத்துக்கு வழிவகுக்கும்.'ஒரு நபர்; ஒரு பதவி' கொள்கையின் கீழ், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., - அஜித் பவாரின் தேசியவாத காங்., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின், மஹாராஷ்டிரா துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர், மத்திய அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டு வருகின்றனர்.இது ஒருபுறமிருக்க, இந்தாண்டு இறுதியில் பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை கருத்தில் வைத்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும், ராஷ்ட்ரீய லோக் சம்தா கட்சியைச் சேர்ந்த உபேந்திர குஷ்வாகா, மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு, பிரதமர் மோடி வரும் 21 - 22ல் செல்கிறார். இந்த பயணத்தை முடித்து, அவர் நாடு திரும்பியவுடன், பா.ஜ., புதிய தேசிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், தே.ஜ., கூட்டணி 3.0 அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kulandai kannan
ஏப் 19, 2025 11:39

ஒரு தலைவரை நியமிக்கக்கூட நேரமில்லாத அளவுக்கு வேலைப்பளு என்றால் நம்ப முடியவில்லை.


vivek
ஏப் 19, 2025 14:33

ஆமாம் டாஸ்மாக் சென்று குப்புற படுக்க முடியுமா?


ராமகிருஷ்ணன்
ஏப் 19, 2025 17:59

ஆமா அப்பன், மவன், பேராண்டி, கொள்ளு பேராண்டி என்று வம்சாவளி ஆக்கிரமிப்பு கொத்தடிமைகளின் கட்சி என்று நினைத்தாயா, இது வேற மாதிரி தலைமையை தேர்ந்தெடுக்கும் கட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை