தேர்தல் கூட்டணி தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேச, காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் இன்று சென்னை வரும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரசில் உள்ள பெரும்பான்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ee7p2j8q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும். கேரள மாநிலத்தில் விஜய்க்கு, 10 லட்சம் ரசிகர்களும், புதுச்சேரியில் ஒரு லட்சம் ரசிகர்களும் இருப்பதால், இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, டில்லி காங்., மேலிடம் கருதுகிறது. கேரள மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக வேணுகோபாலை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி விஜயை சந்தித்துப் பேச விரும்பும் வேணுகோபால், இன்று சென்னை வர உள்ளார். அவர் பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு தலைவராக இருப்பதால், அவரது வருகை, தமிழக போலீசாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட வேண்டும். ஆனால், 'அதெல்லாம் தனக்கு தேவையில்லை' என வேணுகோபால் கூறி விட்டதாக தெரிகிறது. டில்லியில் இருந்து சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். எந்த விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் என்பது, நேற்று மாலை வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் சிலர் அனுமதிச்சீட்டு வாங்கியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீடு அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் என, இரு இடங்களில் வேணுகோபால் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அவர் எந்த ஹோட்டலில் தங்குகிறாரோ, அங்கே விஜயுடன் சந்திப்பு நடக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
ஈரோடை தொடர்ந்து சேலத்தில் பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நேற்று முன்தினம் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பொதுக்கூட்டங்கள் நடத்த, த.வெ.க., நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் கூட்டம் நடத்த, கடந்த மாதமே போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது, டிச., 4ல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு, வேறு தேதி, வேறு இடங்களை தேர்ந்தெடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.இந்நிலையில், சீலநாயக்கன்பட்டி அருகே, நாமக்கல் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில், த.வெ.க., பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.அங்கு, 44 ஏக்கர் இடத்தில், ஒரு லட்சம் பேர் வரை கூடும் அளவுக்கு ஏற்பாடுகளை செய்ய முடியும் என்பதால், அந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாக கட்சியிளர் தெரிவித்தனர். இதற்கிடையே, வரும் 27ல், ஜனநாயகன் பட ஆடியோ விழாவுக்காக, விஜய் மலேஷியா செல்கிறார். எனவே, அதற்கு முன்போ அல்லது டிச., 30ம் தேதியோ கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.ஆனால், குறுகிய கால அவகாசமே உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஜனவரியில், ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு பின், சேலத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கும் என கூறப்படுகிறது. - நமது நிருபர் -