சென்னை :அ.தி.மு.க., உடன் விஜய் கூட்டணி
வைப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்த சந்தேகத்தை முறியடிக்கும்
வகையில், த.வெ.க., தலைவர் விஜய் நேற்று அக்கட்சியையும் வம்புக்கிழுத்து
வசைபாடினார். இதனால், அ.தி.மு.க., - த.வெ.க., இடையே கூட்டணி
உருவாக வாய்ப்பு இல்லை என, நம்பப்படுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த
13ம் தேதி முதல், சனிக்கிழமைதோறும், இரண்டு சட்டசபை தொகுதிகள் வீதம், தமிழக
வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த பிரசார கூட்டங்களில் தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் விமர்சித்த விஜய், அ.தி.மு.க.,வை கண்டு கொள்ளவில்லை. இதனால், அ.தி.மு.க., கூட்டணியை விஜய் விரும்புகிறார் என்ற தகவல் பரவியது.
அதை முறியடிக்கும் வகையில், நேற்று நாமக்கல் பிரசாரத்தில்,
அ.தி.மு.க.,வையும் வம்புக்கிழுத்து வசைபாடினார். அங்கு அவர் பேசியதாவது: தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய, சென்னை மாகாண முதல்வர்
சுப்பராயனுக்கு, நாமக்கல்லில் மணி மண்டபம் கட்டுவோம் என்ற வாக்குறுதி உட்பட
எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. தி.மு.க., -
எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுநீரக
திருட்டு நடந்தது. நாமக்கல் மாவட்ட, விசைத்தறி கூடங்களில் பணி புரியும்,
ஏழை பெண்களை குறி வைத்தே, இது நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள், த.வெ.க.,
ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவர். நாங்கள், சாத்தியமானதையே
சொல்வோம். 'செவ்வாய் கிரகத்தில் ஐ.டி., கம்பெனி; காற்றில் கல் வீடு;
அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை; வீட்டுக்குள் விமானம் ஓட்டப்படும்' என,
முதல்வர் ஸ்டாலினைப் போல வாக்குறுதிகளை அள்ளி வீச மாட்டோம். தி.மு.க., போல
பா.ஜ.,வோடு மறைமுக உறவு வைக்க மாட்டோம். மூச்சுக்கு, 300 முறை,
அம்மா... அம்மா... என சொல்லி விட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்னதை
மறந்து, பா.ஜ.,வுடன் பொருந்தா கூட்டணி வைத்துள்ள, அ.தி.மு.க., போலவும்
இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு பா.ஜ., அரசு என்ன செய்தது? எதற் காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என, எம்.ஜி. ஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.,
குடும்பம், பா.ஜ.,வுடன் மறைமுக உறவு வைத்து உள்ளது. எனவே, தமிழக மக்கள்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன் என்னமோ, ஏதோ என்று நினைத்தேன். இப்போது ஒரு கை பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இவ்வாறு விஜய் பேசினார். பாட்டு பாடி அசத்திய விஜய் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, மதுபானக் கடைகளில், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை குறிப்பிடும் வகையில், விஜய் தன் பேச்சின்போது, 'பாட்டிலுக்கு 10 ரூபாய்' என பாட்டு பாடினார். தி.மு.க.,வின் ஏ.டி.எம்., இயந்திரம் கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விஜய் பேசியதாவது: சமீப காலமாக கரூர் என்றால் இந்திய அளவில், ஒரே ஒரு பெயர் தான் பிரபலமாக ஒலிக்கிறது. பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் அவர் நினைவுக்கு வருவார். சமீபத்தில் கரூரில், முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, முன்னாள் அமைச்சரை பாராட்டினார். ஆனால், இதே ஸ்டாலின், இதே கரூரில், அந்த முன்னாள் அமைச்சர் குறித்து என்ன பேசினார் என்பதை, 'யு-டியூபில்' பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். தி.மு.க., குடும்பத்திற்கு, ஊழல் பணத்தை, 24 மணி நேரமும் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரமாக, அந்த முன்னாள் அமைச்சர் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். சட்டவிரோத கல் குவாரிகள், கரூரின் கனிம வளத்தை அழித்து கொண்டிருக்கின்றன. காலை 11:00 மணிக்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்றால், 11:05 மணிக்கு மணல் கொள்ளை அடிக்கலாம் என சொன்னவர் தான் அதற்கு காரணம். மணல் கொள்ளை பணத்தை வைத்து, வரும் 2026ல் தமிழக மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என, கனவு காண்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.