உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐந்து முதல் 17 வயதிற்கு உட்பட்டோரை தாக்கும் வாக்கிங் நிமோனியா!

ஐந்து முதல் 17 வயதிற்கு உட்பட்டோரை தாக்கும் வாக்கிங் நிமோனியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : பனி மற்றும் குளிர் காலத்தில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை 'வாக்கிங் நிமோனியா' எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சீதோஷ்ண நிலை, பருவ மாற்றங்கள் இதற்கு காரணம். தற்போது குளிர்காலமாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 'வாக்கிங் நிமோனியா' என்பது குறைந்த தீவிர தன்மையுடைய நிமோனியா என்கிறார், இந்திய மருத்துவ கழக தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் அழகவெங்கடேசன். அவர் கூறியதாவது: இந்த வாக்கிங் நிமோனியா என்ற தொற்று, 5 - 17 வயதினரை தொற்றி, வேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு இதன் அறிகுறிகள். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டியது இல்லை. வழக்கமான நிமோனியாவை விட வெவ்வேறு பாக்டீரியாக்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று. பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளம் வயதினரிடையே நெருங்கிய இடங்களில் வசிப்பவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கிளமிடியா நிமோனியா மற்றும் லெஜியோனெல்லா வகை பாக்டீரியாக்களால் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலம் வேகமாக பரவும். வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது நல்லது.மற்றவர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்கலாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், கைகளின் மூலம் மூக்கு மற்றும் வாய் வழியாக கிருமி சென்று காய்ச்சலை பரப்பும்.அதேபோல மற்றவர்களின் எச்சில் பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தனியாக இருத்தல் அவசியம். இது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் காய்ச்சல் என்பதால், உடனடியாக டாக்டரிடம் காண்பித்து மிதமான ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். இளம் வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதோடு இணை நோய்கள் எதுவும் இருக்காது என்பதால், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விடுவர். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பனி மற்றும் குளிர்காலம் மாறும்போது இந்த காய்ச்சலின் தீவிரமும் குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !