உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.25 லட்சம் தருவதாக பேரம் பேசப்பட்டதா? மாஜி பெண் போலீஸ் தொடர்பால் சிக்கிய ஜெயராம்

ரூ.25 லட்சம் தருவதாக பேரம் பேசப்பட்டதா? மாஜி பெண் போலீஸ் தொடர்பால் சிக்கிய ஜெயராம்

பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் போலீசுடன் கூட்டு சேர்ந்து, காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்க, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமுக்கு, 25 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெயராம், 59. இவர், நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் 1997ல் பணியில் சேர்ந்தார். திருமணமாகி, ஒரு மகள் உள்ளார். ஆயுதப்படை டி.ஐ.ஜி., மற்றும் சென்னை மாநகர போலீசில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர், மத்திய மண்டல ஐ.ஜி.,யாக ஜெயராம் பணியாற்றி உள்ளார். தற்போது, ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரிகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற உள்ளார்.

சுங்கச்சாவடி

சர்ச்சைகளில் சிக்குவது ஜெயராமுக்கு வாடிக்கை தான். இவர் மத்திய மண்டல ஐ.ஜி.,யாக இருந்தபோது தான், சிறப்பு டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேஷ்தாஸ், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கினார். இச்சம்பவம் தொடர்பாக, உள்துறை செயலர், டி.ஜி.பி.,யிடம் பெண் எஸ்.பி., புகார் அளிக்கச் செல்கிறார் என்ற தகவல் அறிந்து, அவரை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்த உத்தரவிட்டதே ஜெயராம் தான் என்று கூறப்பட்டது.இச்சம்பவத்திற்கு பின், 'டம்மி' பதவிகளில் பணி அமர்த்தப்பட்டார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முக்கிய பதவிகளை பிடிக்க முயற்சி செய்து வந்தார். இதற்காக, முக்கிய வி.ஐ.பி., ஒருவரின் உதவியையும் நாடி வந்தார்.தற்போது, வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக உள்ள அஸ்ரா கர்க், சென்னை மாநகர போலீசில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணிபுரிந்த போது, சென்னை ராமாபுரத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, 'ஸ்பா' ஒன்றுக்கு 'சீல்' வைத்து, அதன் உரிமையாளர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தார்.அந்த ஸ்பா ஊழியர்களுடன், ஜெயராம், 'கேக்' வெட்டி கொண்டாடியது வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது சிறுவன் கடத்தல் வழக்கில் அவர் சிக்கி இருப்பதும், ஒரு பெண்ணால் தான் என தெரிய வருகிறது. மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி, போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்து, காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர்.

திருமண ஜோடி

இந்த மகேஸ்வரியுடன், ஜெயராம் தொடர்பில் இருந்துள்ளார். மகேஸ்வரிக்கு சட்ட விரோத கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. மகேஸ்வரி தான், காதல் திருமண ஜோடியை பிரிக்கும் வேலையை பொறுப்பேற்று செய்துள்ளார்.இதற்காக, ஜெயராமுக்கு 25 லட்சம் ரூபாய் தருவதாக பேசி முடிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அது பற்றி விசாரணை நடக்கிறது. மகேஸ்வரியின் ஆலோசனையின்படியே, அரசு வழங்கிய 'இன்னோவா' காரை, காதல் திருமணம் செய்த வாலிபர் தனுஷின் சகோதரரை கடத்த, ஜெயராம் கொடுத்துள்ளார். அந்த காரை போலீஸ்காரர் ஓட்டியுள்ளார். ஜெயராம் காரில் தான், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்த சிறுவனை ஏற்றிச் சென்று, அவரின் வீட்டின் அருகே விட்டுள்ளனர்.அந்த ஹோட்டலில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் இருந்ததற்கான ஆதாரமும் சிக்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 17, 2025 20:26

திமுக ஆட்சியில் காவல் துறையினரே, அதிலும் அதில் பெரிய பதவியில் உள்ளவர்களே குற்றம் அதிகம் செய்கிறார்கள். இப்படி இதற்கு முன்பு எந்த ஆட்சியிலும் நடந்ததில்லை. ஆம்,அறிஞர் அண்ணா கருணாநிதி, ஆட்சியில் கூட இப்படி நடந்ததில்லை. அவர்களை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 17, 2025 13:11

சமூக விரோதிகளால் நிரம்பியுள்ளதா காவல்துறை ??


VENKATASUBRAMANIAN
ஜூன் 17, 2025 08:22

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம். யாருக்கும் பயம் இல்லை. வேலியே பயிரை மேய்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை