உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூன்றாவது மொழி அறிந்ததால் உயர்ந்தோம்! கோவை தொழில்முனைவோர் நச் பேட்டி

மூன்றாவது மொழி அறிந்ததால் உயர்ந்தோம்! கோவை தொழில்முனைவோர் நச் பேட்டி

கோவை : தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக நம் நாட்டில் புழக்கத்திலுள்ள, ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொண்டால், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் சாதிக்கலாம் என்று, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அடித்து பேசுகின்றனர்.தமிழ், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளோ அல்லது வடமாநில மொழியான ஹிந்தி, பீகாரி, குஜராத்தி, ராஜஸ்தானி உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை கற்கலாம். இது, நாட்டின் எந்த இடங்களுக்கு கல்வி, தொழில், சுற்றுலா நிமித்தமாக செல்லும்போதும் கைகொடுக்கும்.கோவையிலுள்ள பெரும்பாலான வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என்கின்றனர். ஹிந்தி தெரியாத பலர், தற்போது பயிற்சியாளர் நியமித்து கற்று வருவதாக கூறுகின்றனர்.

வரப்பிரசாதம்

வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி அமைப்பு:

மொழி என்பது ஒரு குழந்தையை போன்றது. அந்த மொழியை நாம் கொண்டாட வேண்டும். ஒரு மொழி அல்ல, பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். கல்வி கற்பதற்கும், தொழில் முன்னேற்றத்திற்காகவும் உலகம் முழுக்க, எங்கு பயணித்தாலும் முதலிடத்தில் நிற்பது மொழி. அதை கற்றுக்கொண்டால் எதிரே பேசுபவருடன், நமக்கு நல்ல புரிதல் ஏற்படும். நம் எண்ணங்களை தெளிவாக விளக்கலாம். தொழில்துறையினருக்கு 'எக்ஸ்டிரா' மொழி ஒரு வரப்பிரசாதம்.

சுந்தரராமன், தலைவர், சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்):

நம் தேசம் பல்வேறு மதம், இனம், மொழி, கலாசாரம், பண்பாடுகளை கடந்து சிறந்து விளங்குகிறது. மொழிகள் கலாசாரத்துக்கான பாலம். மொழிகளின் தேவையை, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு எந்த மொழி தேவையோ, அதை நாம் கற்பதில் தவறில்லை. குறிப்பிட்ட மொழியை படியுங்கள், பேசுங்கள் என்று கட்டாயப்படுத்தவோ, நிபந்தனை விதிக்கவோ கூடாது. எவ்வளவு கூடுதல் மொழியறிவு இருக்கிறதோ, அந்தளவு நல்ல வளர்ச்சியை எட்டுவோம்.

மொழியை வளர்க்க வேண்டும்

ஜெகதீஷ் சந்திரன், செயலாளர், சிஸ்பா (தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம்):

தொழில்முனைவோர் ஒவ்வொருவரும், மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்வது அவசியம். பஞ்சு மற்றும் நுால் வர்த்தகத்துக்கு, ஹிந்தி மொழி மிக மிக அவசியம். வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதிலிருந்து, பெரிய தொழிலதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது வரை, நமக்கு ஹிந்திமொழி தெரிந்திருப்பது முக்கியம்.

கார்த்திகேயன், தலைவர், கொடிசியா:

மூன்றாவது மொழி என்பது, இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று. கேரளாவுக்கோ, ஓசூரை அடுத்த பெங்களூருவுக்கோ சென்றோமென்றால் மலையாளமோ, கன்னடமோ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஹிந்தி தெரிந்திருந்தால் பேசி சமாளிக்கலாம்.தொழில் ரீதியாக, மூன்றாவதாக ஒரு மொழி நமக்கு கட்டாயம் தேவை. அது ஹிந்தியாக இருந்தால் நல்லது. அடுத்த சந்ததிக்கு வழிகாட்டியாக இருக்கும். மொழியை நாம் வெறுப்பதை தவிர்க்க வேண்டும். மொழியை வளர்க்க வேண்டும்.

அவசியம்

சிவக்குமார், தலைவர், காட்மா (கோயமுத்துார், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம்):

சிறு, குறு தொழில் கூடங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும், ஹிந்தி பேசுபவர்கள். ஹிந்தி தெரியாததால், அவர்களிடம் எங்களால் நேரடியாக பேச முடியாது. சூப்பர்வைசரிடம் சொல்லியே தகவல் பரிமாறுகிறோம். வடமாநிலங்களுக்கு தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்ளும் போது, ஹிந்தி தெரியாமல் தடுமாறுகிறோம். அவர்கள் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், ஹிந்தியில்தான் பேசுவார்கள். மொழி தெரியாமல் வர்த்தகம் செய்வது சிரமம். அதனால் பயிற்சியாளர் நியமித்து, ஹிந்தி பேச கற்று வருகிறோம்.

சுருளிவேல், துணை தலைவர், டான்ஸ்டியா (தமிழ்நாடு சிறுகுறு தொழில்கள் சங்கம்):

ஹிந்தி மொழியை கட்டாயம், ஒவ்வொரு தொழில் முனைவோரும் கற்க வேண்டும். இன்றைய தொழிற்கூடங்களில் ஹிந்திமொழி பேசும் தொழிலாளர்கள் அதிகம். அவர்களை நிர்வகிக்கவும், வேலை வாங்கி உற்பத்தியை பெருக்கவும், ஹிந்தி மொழி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

மிகுந்த பயன்

அருள்மொழி, தலைவர், ஓஸ்மா, (ஓப்பன் எண்ட் மில் சங்கம்):

டில்லியில் பாரத் டெக்ஸ்ட் கண்காட்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்திருந்தது. அனைவருடனும் பேசினர். ஆனால் தமிழகத்திலிருந்து சென்ற பலரும், ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டனர். தற்போதைய சூழலுக்கு, ஹிந்தியை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகி விட்டது.

கிருத்திகா, துணைத்தலைவர், கோவை மாவட்ட கம்ப்ரசர் அசோசியேஷன்:

மும்மொழிக்கொள்கை ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம்; அது நம் விருப்பம். மூலப்பொருட்களுக்கு வடமாநிலங்களை நம்பியே இருக்கிறோம். உற்பத்தி செய்த உபகரணங்களையும், விற்பனைக்கு அங்குதான் அனுப்பி வைக்கிறோம்.வர்த்தக ரீதியாக, அடிக்கடி நாம் தொடர்பில் இருக்கிறோம். அதனால் ஹிந்தி கற்று வருகிறோம். வடமாநிலங்களில் நடக்கும் தொழிற்கண்காட்சியில் பங்கேற்கும் போதும், பயணத்தின் போதும், கற்ற அரைகுறை ஹிந்தி எங்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ARUL
பிப் 24, 2025 09:56

நான் மூன்றாவது மொழியாக ஜப்பானியர்கள் பேசும் மொழியைக் கற்க விரும்புகிறேன். காரணம் மிகவும் துல்லியமான நேரம், நேர்த்தி, தொழில்நுட்பம், வீட்டு வேலைக்கென வேலையாட்களை நியமிக்காமல் தாங்களே வேலைகளைச் செய்யும் பண்புகள், நீண்ட நோயற்ற ஆயுசு காலம் போன்றவை என்னைக் கவருகிறது ஜப்பானியர்களின் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியத்தை தேடிப் பாருங்கள், இந்தியாவில் உள்ள ஜப்பானியர்கள் கம்பெனியில் பணிபுரியும் பிற நாட்டினருக்கும் அதே சட்டப்படி ஊதியம் வழங்கப்படுவதை தெரிந்து கொண்டேன். ஜப்பானிய மொழியை கல்விக் கூடத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஆலோசித்து வழி சொல்லுங்கள். ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்ள இதுபோன்ற காரணங்களும் விருப்பமும் இருக்கட்டும். விருப்பத்தோடு குறைந்து ஐந்து மொழிகளைக் கூட கற்கலாம், கட்டாயமில்லாமல். நான இந்தி அல்லாமல் மூன்று மொழிகளைக் கற்றிருக்கிறேன். நான் சிறு வயதில் இந்தியை முறையாக கற்க அதற்குரிய சங்கத்திற்கு மூன்று நாட்கள் சென்று காத்திருந்தேன், விருப்பத்துடன் சென்றிருந்த என்னை சேர்த்துக்கொள்ளவிவ்லை, காரணம் அப்போது தமிழ்நாட்டில் சில சமூகத்தினர் மட்டுமே பெற்றோர்களின் கட்டாயத்தால் கற்கும் மொழியாக இருந்தது. நான் இந்தி மொழியை கற்காததால் என் வாழ்வின் முன்னேற்றத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. விரும்பி கற்போம். திணிப்பும் குறிப்பிட்ட மொழியை தூக்கிப் பிடிக்கவும் வேண்டாம். தற்போது இந்திய அரசாங்க ஆணைகளும் அறிவிப்புகளும் பல மொழிகளில் வெளிவந்தாலும், இந்தி மொழியின் புரிதல்கள் மட்டுமே இறுதியானது என்று குறிப்பிட்டு வெளிவருவது, சரியாக மொழிபெயர்க்க எவருமில்லயோ என்ற சந்தேகத்தையும், குழப்பத்தையும், எதிர்காலத்தை ஒரு மொழியை தூக்கிப் பிடிப்பதால் பல மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கேள்விக்குறியாகவும் மாற்றுகிறது. தயவு செய்து கட்டாயம் வேண்டாம் தேவையின் அடிப்படையில் விருப்பத்தோடு பல மொழி கற்கும் சூழலை உருவாக்க முயற்சிப்போம்.


Suresh Rajagopal
பிப் 23, 2025 06:50

திணிப்பு திணிப்பு என்று இல்லாத ஒன்றை, பேய், பேய் என்று தானே பயந்தவர்கள் மற்றவர்களை பயமுறுத்திகிறார்கள். மற்ற மொழிகளையும் குறிப்பாக இந்தியையும் கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு பயன் கொடுக்கும்


Angel Christina.S
பிப் 22, 2025 21:51

மூன்றாவது மொழி கற்றுக்கொள்வது நல்லது தான் ஆனால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது யாரு யாருக்கு என்ன தேவையோ எங்கு படிக்க வேண்டும் என்ன படிக்க வேண்டுமோ அவர்கள் தீர்மானிக்கிட்டும் எவரும் அத சொல்லக்கூடாது.


Ram pollachi
பிப் 21, 2025 20:26

ஹிந்தி பிரசார சபா மூலம் நடத்தப்படும் தேர்வில் அப்பா, அம்மா மற்றும் குழந்தைகள் அனைவரும் ஒரே வகுப்பில் அமர்ந்து தேர்வு எழுதுவது அதன் மீது உள்ள ஆர்வம் தான். பல நபர்கள் இலவசமாக கற்று தருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு..


சண்முகம்
பிப் 21, 2025 20:05

அரை சம்பளத்திற்கு வடநாட்டாரை வேலைக்கு அமர்த்தி அவர்களை மேய்க்க இந்தி படித்த தமிழர்கள் தேவை இவர்களுக்கு.


சண்முகம்
பிப் 21, 2025 20:00

அடிவருடிகள்.


theruvasagan
பிப் 21, 2025 17:21

உழைக்கனும். முன்னேறனும் என்று நினைக்கறவனுக்குத்தானே வேறு மொழிகளையும் தெரிஞ்சுக்கிட்டா அனுகூலம் என்கிற எண்ணம் வரும். இலவசங்கள் டாஸ்மாக் சரக்கு இருந்தா போதும். இதுக்கு மேல என்ன வேணும். எதுக்கு உழைக்கனும், முன்னுக்கு வரணும், என்று நினைக்கிற வீணாப்போன தற்குறிகளுக்கு மொழிகளைப் பற்றி என்ன கவலை.


Ram pollachi
பிப் 21, 2025 13:05

இலக்கண பிழை இல்லாமல் சுத்தமாக, மரியாதையாக ஹிந்தி மொழி பேசுவது டில்லியில் மட்டுமே, மற்ற வட மற்றும் வடகிழக்கு மாநில மக்கள் ஹிந்தியை துண்டு துண்டு வாக்கியத்தை முடிக்காமல் பாதியில் நிறுத்திவிடுவார்கள். மொழியை கற்றுக் கொள்ளும் "ஆர்வம் இல்லை போடா".... இது தான் இன்றைய நிலை தோழர்கள் சங்கத்தை வளர்த்து தொழில் துறையை மூடிவிட்டார்கள்... வேலை இருக்கு வா என்றால் வரவே மாட்டார்கள், வேலை இல்லாமல் சும்மா இருக்கும் போது வேலை தாங்க முதலாளி என்பான் நம்மவர்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 21, 2025 11:39

மற்ற மாநிலத்தவரின் பங்கு நம் தமிழக உற்பத்தி துறையில் கிட்ட தட்ட 60 சதவீதம் அளவிற்கு தற்போது வந்து விட்டது. இனியும் தமிழும் ஆங்கிலமும் போதும் என்று இருந்தால் சுய தொழில் செய்வோர் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வைத்திருப்போர் மிகவும் பாதிக்கப்படுவார்கள். உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு நம் தமிழக இளைஞர்கள் யாரும் வருவதில்லை. ஆகவே மற்ற மாநிலத்தவரை நம்பித்தான் தொழில் துறையே உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு நிறுவன அதிபர் கூறினார் வட மாநில இளைஞர்கள் இல்லாமல் இனி தமிழகத்தில் எந்த தொழிலும் நடத்த முடியாது துவக்கக் கூட முடியாது. ஆகவே இந்தி அல்லது வேறெதெனும் ஒரு மொழி கட்டாயம் தெரிந்தவர்கள் மட்டுமே தொழில் நிறுவனம் நடத்த முடியும். ஹிந்தி தெரிந்தால் ஆட்களை தேர்வு செய்வது எளிது. மலையாளம் அல்லது கன்னடம் தெலுங்கு தெரிந்தால் அந்த அந்த மொழி தெரிந்த இளைஞர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும். இதில் சாய்ஸ் கம்மி. ஹிந்தியில் சாய்ஸ் அதிகம். தொழில் அதிபர்கள் மட்டும் அல்ல அந்த அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஸ்கில்ட் லேபர் என்று சொல்லப் படும் சூப்பர்வைசர் மேனேஜர் அக்கவுண்ட் கூட கட்டாயம் மூன்றாம் மொழி அதிலும் ஹிந்தி தெரிந்திருப்பது கட்டாயம். இல்லை என்றால் வேலை வாங்க முடியாது. சமீபத்தில் எதிர்ப்பே இல்லாத ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஹிந்தியில் பிரச்சாரம் செய்ததால் தானே வெற்றி பெற்றது. இதை விட சிறந்த உதாரணம் வேறு உண்டா ஹிந்தி வேண்டும் என்பதற்கு. ஹிந்தி வேண்டாம் என்றால் தோற்றாலும் பரவாயில்லை என்று ஹிந்தியில் பிரச்சாரம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். திமுக ஹிந்தியில் பிரச்சாரம் செய்ததை பார்த்த தமிழக மக்களும் இனி திமுக ஹிந்தி படிப்புக்கு எதிராக இருக்காது என்று தானே திமுகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தனர்.


lana
பிப் 21, 2025 10:47

ஏன் பாவி தொழில் முனைவர் எல்லாம் கூடுதல் மொழி கற்க கஷ்ட பட்ட மாதிரி நம்ம சந்ததி கஷ்டம் பட கூடாது என்று தானே கூறுகிறார்கள். சரி நீ படிக்கும் போது எந்த வகுப்பில் ஆங்கிலம் சொல்லி குடுத்தாங்க. நீ அரசு பள்ளியில் படித்தால் உன் பிள்ளைகள் ஐ எந்த பள்ளியில் சேர்ப்பார். நாம் பெரும்பாலும் தமிழ் வழியில் கல்வி படித்து உள்ளார். பிள்ளைங்க எந்த வழி படிக்கிறார்கள். 200 ரூபாய் உ பி உங்கள் பிள்ளைகளை மட்டும் நல்ல கூடுதல் மொழி காசு கொடுத்து படிக்க வேண்டும். பாவப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்


முக்கிய வீடியோ