ஆசிரியர்களை பாடாய்படுத்தும் டேப்லெட்கள்; பழைய மாடல்களுக்கு ரூ.பல கோடி வீணடிக்கப்பட்டதா
மதுரை: தொடக்க கல்வித்துறையில் கடந்தாண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 'டேப்லெட்'கள் அடிக்கடி பழுதாகி பாடாய்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்களுக்கு கணினிசார் கற்றல் கற்பித்தல் பணிக்காக ரூ.80 கோடி மதிப்பில் இடைநிலை, பட்டதாரி என 79 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்'கள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவு, எமிஸ் தொடர்பான பதிவேற்றப் பணிகள், கல்விச் செயலிகள், மாணவர்கள் விவரம், துறைசார் ஜூம் மீட்டிங்கில் பங்கேற்பது போன்ற நோக்கத்திற்காக இவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த டேப்லெட்கள் அடிக்கடி முடங்குவது, பழுதாவது போன்ற பிரச்னைகளால் ஆசிரியர்கள் உரிய முறையில் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவரவர் வைத்திருக்கும் ஸ்மார்ட் அலைபேசி மூலமே இப்பணிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இந்த டேப்லெட்கள் ஓல்டு வெர்சனாகவும், ஒரு ராம் 1 ஜி.பி., கொண்டதாகவும் உள்ளதால் அவற்றை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இதன் மூலம் ரூ.பல கோடி வீணடிக்கப்பட்டுவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கல்வித்துறையில் இதுபோன்று ரூ. கோடிக்கணக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கமிஷனுக்காகவே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துகின்றனரோ என சந்தேகம் வருகிறது. மாணவர்களுக்கான பேக், காலணிகள், முன்பு வழங்கிய லேப்டாப் போன்ற திட்டங்கள் மூலம் வழங்கப்படும் எந்த பொருளும் தரமானதாக இருப்பதில்லை. இதுகுறித்து புகார்கள் வந்தாலும் அதிகாரிகள் மட்டத்திலேயே சரிக்கட்டப்படுகின்றன. அதுபோன்ற ஒன்று தான் இந்த 'டேப்லெட்' திட்டம். ஆசிரியர்களுக்கு கொடுத்த அனைத்தும், 'டேப்லெட்' அறிமுகமான நிலையில் தயாரிக்கப்பட்ட 'ஓல்டு வெர்ஷன்'. தற்போது எவ்வளவோ 'அப்டேட்' வந்துவிட்டது.இதனால் கமிஷனுக்காக ரூ. பல கோடி வீணடிக்கப்பட்டதா எனக் கேள்வி எழுகிறது. இதன்காரணமாக கற்பித்தல் பணிக்கு இடையே கணினிசார் பணிகளை உடனுக்குடன் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் மன உளைச்சலில் தவிக் கின்றனர் என்றனர்.