உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தே.மு.தி.க., - பா.ம.க., - நா.த.க., கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன? அமித் ஷா நடத்தும் ரகசிய ஆய்வு

 தே.மு.தி.க., - பா.ம.க., - நா.த.க., கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன? அமித் ஷா நடத்தும் ரகசிய ஆய்வு

சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை அறிந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, தே.மு.தி.க., - பா.ம.க., - நாம் தமிழர் ஆகிய கட்சி களுடன், அவரே கூட்டணி பேச்சில் ஈடுபட உள்ளார். இதற்காக, அக்கட்சிகளின் எதிர்பார்ப்பை கேட்டறியும் முயற்சியில், அவர் இறங்கியுள்ளார். தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., மட்டுமே பெரிய கட்சிகள். பா.ம.க., - தே.மு.தி.க., உடன் கூட்டணி பேச்சை, சில மாதங்களுக்கு முன்பே, பா.ஜ., மேலிடத் தலைவர்கள் துவக்கினர். அதற்கு, தேர்தல் சமயத்தில் சொல்வதாக, அக்கட்சிகள் கூறி விட்டன. அதேசமயம் தே.மு.தி.க., - பா.ம.க., ராமதாஸ் தரப்பினருடன், தி.மு.க., கூட்டணி பேச்சு நடத்தி வரும் தகவல், பா.ஜ., மேலிடத்திற்கு தெரிய வந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியை வலுவானதாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அவர் தமிழகத்தில் உள்ள தனக்கு நெருக்கமான நபர்களிடம், சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமித் ஷாவிடம் அவர்கள் கூறியுள்ளதாவது: பா.ம.க., அன்பு மணி - தே.மு.தி.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளை சேர்க்க, அ.தி.மு.க., முயற்சிக்கிறது. ஆனால் அக்கட்சிகள், பழனிசாமியை நம்ப தயாராக இல்லை. ஏனெனில், முந்தைய தேர்தல்களில், கூட்டணி கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை, பழனிசாமி நிறைவேற்றவில்லை. கூட்டணியில் சேரும் கட்சிகள் தொகுதிகள் மட்டுமின்றி, தேர்தல் செலவையும் எதிர்பார்க்கின்றன. அதனால், நீங்களே அக் கட்சிகளிடம் பேச்சு நடத்தினால், அக் கட்சிகள் கூட்டணியில் இணையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, டிசம்பரில் தமிழகம் வரும் அமித் ஷா, அந்த கட்சிகளுடன் இறுதி பேச்சு நடத்துவதாக கூறியிருப்பதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர். பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை, தே.ஜ., கூட்டணிக்கு கொண்டு வரும் பொறுப்பை அமித் ஷாவே ஏற்றுக் கொண்டிருப்பது ஏன் என்பது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, ''இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார். -நமது நிருபர்-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ