காசாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுமா; அடுத்து என்ன நடக்கும்? மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேருமா என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படியான சூழலில் ஐ.நா.,வின் பொது சபை இம்மாதம் கூடுகிறது. எங்கே இந்த கேள்விகள் எல்லாம் சபையில் ஒலிக்குமோ என்ற அச்சத்தால், ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர்களுக்கு விசா வழங்க மறுத்திருக்கிறது அமெரிக்கா. கடந்த 1988ல் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்துக்கும் இதே போல் அமெரிக்கா விசா வழங்க மறுத்தபோது, ஐ.நா., பொது சபையின் கூட்டம் ஜெனீவாவுக்கு மாற்றப்பட்டது. சர்வதேச சமூகத்துக்கு அப்போது இருந்த அதே துணிச்சல் இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி, ஐ.நா.,வின் சர்வதேச உயர்நிலை கருத்தரங்கை கடந்த ஜூலை 28ல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட்டியிருந்தன. அது அர்த்தமற்ற நடவடிக்கையாகவே தோன்றுகிறது. ஏனெனில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகள் கூட, காசா போருக்கு பக்கபலமாகவே இருக்கின்றன. ஈரானின் அச்சுறுத்தல் மட்டுமே வளைகுடா நாடுகளின் கண்களுக்கு தெரிகிறது. அந்த அச்சுறுத்தலை களையவே, இஸ்ரேலுடன் இயல்பான உறவை பேண வளைகுடா நாடுகள் விரும்புகின்றன. இதற்காக அமெரிக்காவின் உதவியுடன், அப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இஸ்ரேலிடம் வளைகுடா நாடுகள் இணக்கமாகிவிட்டன. எனவே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரான்ஸ், பிரிட்டன் போன்ற சில ஐரோப்பிய நாடுகளின் முழக்கம் நிச்சயம் எடுபடாது. சில ஆண்டுகளுக்கு முன் கூட, ஒரு சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தன. அப்போது, முதல் நாடாக குரல் கொடுத்தது இந்தியா தான். ஆனால், இதுவரை அந்த குரல் எதிரொலிக்கவே இல்லை. தற்போது மேற்கு கரையில் பாலஸ்தீனர்களுக்கு மிகப் பெரிய பிரச்னை எழுந்திருக்கிறது. அது, இஸ்ரேல் நடத்தும் சட்டவிரோத குடியேற்றம். இஸ்ரேலில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயரும் யூதர்கள், அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் பாலஸ்தீனர்களை விரட்டி அடிக்கின்றனர். இதன் விளைவால் அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல், இதுவரை குறைந்தபட்சம் 964 பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த வன்முறைக்கு பாலஸ்தீன கிறிஸ்துவர்களும் தப்பவில்லை. காசாவில் உள்ள மிகப் பழமையான புனித போர்பைரஸ் கிறிஸ்துவ தேவலாயம் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 18 பாலஸ்தீன கிறிஸ்துவர்கள் உயிரிழந்தனர். அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்தையும் வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. பாலஸ்தீனர்கள் - இஸ்ரேலியர்கள் இடையே நடக்கும் போராட்டமே பாலஸ்தீன கொள்கை. ஆனால், அதை முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமாக மடைமாற்றி மிகப் பெரிய தவறு இழைத்தது ஹமாஸ். அதனால், தனி நாடு என்ற கனவு, பாலஸ்தீனர்களுக்கு இதுவரை நனவாகவில்லை. ஒரு காலத்தில் பாலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேலிய மக்களும் ஆதரவாகவே இருந்தனர். ஆனால், 2023, அக்., 7ம் தேதிக்கு பின் அது தலைகீழாக மாறிவிட்டது. அன்றைய தினம் ஹமாஸ் நடத்திய தாக்குதல், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்களுக்கு வெறுப்புணர்வை துாண்டிவிட்டது. தற்போது காற்று இஸ்ரேல் பக்கம் வீசுவதால், பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி தலைவர்கள், 2025 இறுதிக்குள் மேற்கு கரை தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டு விடும் என அடித்துக் கூறுகின்றனர். காசாவில் தினசரி பசி, பட்டினி, துயரம் என பல்வேறு கொடுமைகள் தாண்டவமாடுகின்றன. அதனால் சண்டை நிறுத்தம், பிணைக் கைதிகளை ஒப்படைப்பது, மனிதாபிமான உதவிகள் வழங்குவது, ஹமாஸிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பது, இடிந்து போன உள்கட்டமைப்பு மற்றும் வாழ்விடங்களை புனரமைப்பது போன்ற விஷயங்களில் தான் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் இருக்கிறது. இதனால், தனி பாலஸ்தீன நாடு என்ற பேச்சுக்கே உலக நாடுகள் இடம் தரவில்லை. ஏனெனில், அமெரிக்காவின் உதவி இல்லாமல் அங்கு எதையும் செய்து விட முடியாது. அமெரிக்காவும் பாலஸ்தீனம் உதயமாக என்றுமே விடாது. இஸ்ரேலும் காசாவை தன் பிடியில் கொண்டு வருவதற்கான வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறது. இதனால், வரும் நாட்களில் ரத்தம் சிந்தி உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். காசாவை மனிதாபிமான நகரமாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவித்திருக்கிறது. காரணம் கேட்டால், பாலஸ்தீனர்கள் தங்குவதற்காக நகரை தயார்படுத்தி வருவதாக கூறுகிறது இஸ்ரேல். யூதர்கள் அல்லாதோருக்கு, யூதர்கள் உதவ முன் வருகின்றனர் என சொல்வது நிச்சயம் முரண்பாடானது. மேற்கு கரையில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன. அப்போது, மேற்கு கரையின் புவியியல் அமைப்பே முற்றிலும் மாறியிருக்கும். எனவே, தனி நாடு என்ற பாலஸ்தீனர்களின் கொள்கை மெல்ல நீர்த்துப் போகும். அதை, இந்த உலகமும் மவுன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்க்கும்டி.எஸ்.திருமூர்த்தி, ஐபிஎஸ்., ஓய்வு.