உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனியார் பல்கலை சட்ட மசோதா திடீரென வாபஸ் பெறப்பட்டது ஏன்?

தனியார் பல்கலை சட்ட மசோதா திடீரென வாபஸ் பெறப்பட்டது ஏன்?

சென்னை: தனியார் பல்கலை அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு அளவை மேலும் குறைப்பதற்காகவே, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி பகுதிகளில், 25 ஏக்கர்; நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 30 ஏக்கர்; ஊரக பகுதிகளில், 50 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் இருந்தால், தனியார் பல்கலை துவங்க வகை செய்யும் சட்ட மசோதா, கடந்த, 17ம் தேதி, சட்டசபையில் நிறைவேறியது. அப்போது, 'உயர் கல்வியில் தனியார் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். அரசு உதவி பெறும் கல்லுாரிகள் பல்கலையாக மாறினால் கட்டணம் உயர்ந்து, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். இடஒதுக்கீடு முறையாக இருக்காது' என்று கூறி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலியும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் பல்கலை அமைப்பதற்கான நிலப்பரப்பை மேலும் குறைக்க வேண்டும் என, தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் வலியுறுத்தினர். அவர்களுக்கு பதிலளித்த, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், 'உயர் கல்வியும், ஆராய்ச்சியும் வளர வேண்டும் என்பதற்காக, தனியார் பல்கலை சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனால், இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்பை மேலும் குறைக்க வேண்டும் என, சில எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில், ஊரகப் பகுதிகளில் இருக்க வேண்டிய 50 ஏக்கரை, 45 ஏக்கராக குறைத்துள்ளோம்' என்றார். இந்நிலையில், தனியார் பல்கலை சட்ட மசோதா திரும்ப பெறப்படுவதாக, அமைச்சர் கோவி செழியன், கடந்த 26ம் தேதி திடீரென அறிவித்தார்.

பின்னணி என்ன?

ஊரக பகுதிகளில் தனியார் பல்கலை அமைக்க, 50 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என, சட்ட மசோதாவில் உள்ளது. ஆனால், அமைச்சர் கோவி செழியன் பேசும் போது, '45 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது' என்றார். அவர் வாய்மொழியாக அப்படி சொன்னாலும், சட்ட மசோதாவில் இருப்பது தான் செல்லுபடியாகும். அதனால், குழப்பம் ஏற்பட்டது. மேலும், தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், சிறுபான்மை கல்லுாரி நிர்வாகத்தினரும், இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யுமாறு, அரசை வலியுறுத்தி உள்ளனர். அதை செயல்படுத்தவும், நிலப்பரப்பை மேலும் குறைக்கவுமே, சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வியாளர்களின் எதிர்ப்பே காரணம்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் அறிக்கை: தனியார் பல்கலை சட்ட மசோதா, கடந்த 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அ.தி.மு.க., சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். 17ம் தேதி நடந்த விவாத்தில் பேசும் போது, 'அரசு உதவி பெறும் கல்லுாரிகள் பல்கலைமானால், கட்டண கொள்ளையில் ஈடுபடும். இதனால், ஏழை, நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்படுவர். இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். எனவே, சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்' என, வலியுறுத்தினேன். இப்போது பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், மசோதாவை திரும்ப பெறுவதாக, அமைச்சர் அறிவித்துள்ளார். கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால், தி.மு.க., அரசு பின்வாங்கியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அம்மாப்பேட்டை ஆதவன்
அக் 29, 2025 11:33

சட்டம் நிறைவேறினால் சந்துக்கு சந்து பல்கலை தான். அனைவரும் பணம் பார்க்கலாம்


ஆரூர் ரங்
அக் 29, 2025 10:56

சிவன் ஆலய நிலத்தில் குத்தகை கொடுக்காமல் நடத்தப்படும் சென்னையின் பிரபல சிறுபான்மையின கலைக் கல்லூரி வெகு நாட்களாக பல்கலைக்கழக அந்தஸ்துக்கு முயற்சிக்கிறது.. இந்த சட்டம் வந்தால் அவர்களுக்குத்தான் சந்தோஷம் பொங்கும்.


Veeraputhiran Balasubramoniam
அக் 29, 2025 08:58

புலி பதுங்குகிறது என்றால் சிறுபான்மையின கூட்டத்துக்கு ஏதாவது பாதிப்பு இருக்கலாம், அதனால் தான் பதுங்குகிறதோ? என்பதில் சற்று கவனமாக ஆராய வேண்டும்


D Natarajan
அக் 29, 2025 08:41

எல்லா dmk ...களுக்கும் அதிஷ்டம் . பல்கலைக் கழகம் திறந்து கொள்ளை அடிக்க வழி பிறந்து விட்டது


அருண் பிரகாஷ் மதுரை
அக் 29, 2025 07:03

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும், சிறுபான்மை கல்லூரி நிறுவனங்களும் சில கோரிக்கைகளை வைத்தனர்.. இப்போ புரியுமே இந்த சட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று... ஆட்சி முடியப்போகும் தருவாயில் ஏன் இந்த அவசர சட்டம், அப்போ இதுவரை இந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை வளர்ச்சி அடையவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா.. அரசால் கொடுக்க முடியாத வளர்ச்சியை தனியார் கல்லூரிகள் கொடுத்து விட முடியும் என்று கூற எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்.அப்போ அரசு கல்லூரிகளை தனியார் கல்லூரிகளாக மாற்றுங்கள்.எல்லா துறையிலும் தோல்வி. இதில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், சாதனை மேல் சாதனை என்ற தற்பெருமை வேறு.


G Mahalingam
அக் 29, 2025 06:53

கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்தால் அரசியல் வாதிகளுக்கு 100 மடங்கு வருமானம் கிடைக்கும். படித்து வெளிவரும் மாணவர்களின் பெற்றோர் கடனாளிகளாக இருப்பார்கள். இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை